தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண பாதுகாப்புக்காக டெல்டா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் ராஜேஷ் தாஸ் சிக்கினார். இதுதொடர்பாக அந்தப் பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார், சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் உட்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸுக்கு சிறைத் தண்டனையும் அபராமும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ராஜேஷ்தா ஸ் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு தண்டனையை உறுதி செய்ததோடு, அவரைக் கைதுசெய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜேஷ் தாஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார்.
இந்தநிலையில்தான் ராஜேஷ் தாஸுக்கும் அவரின் மனைவியான தமிழக எரிசக்தித்துறையின் செயலாளருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் பீலா வெங்கடேசன், விவாகரத்து கேட்டு ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து பீலா வெங்கடேசனுக்கும் ராஜேஷ் தாஸுக்கும் இடையே தையூர் பங்களா தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இந்த பங்களாவின் மின் இணைப்பைத் துண்டிக்க பீலா வெங்கடேசன், உரிய ஆவணங்களுடன் மின்வாரியத்தில் மனு கொடுத்தார். அதனடிப்படையில் பங்களாவின் மின் இணைப்பை ஊழியர்கள் துண்டித்தனர். அதற்கு ராஜேஷ் தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ராஜேஷ் தாஸ் மற்றும் அவருடன் சிலர் தையூர் பங்களாவுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பீலா வெங்கடேசன், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் தாஸ் மற்றும் அவருடன் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள்மீது புகாரளித்தார். இதையடுத்து உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், ராஜேஷ் தாஸ் உள்பட பத்து பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷ் தாஸுக்கு கேளம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பினர். சம்மனை பெற்றுக் கொண்ட ராஜேஷ் தாஸ், விசாரணைக்கு வர கால அவகாசம் கேட்டிருந்தார். மேலும் அவர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. இந்தச் சூழலில்தான் கேளம்பாக்கம் போலீஸார் ராஜேஷ் தாஸை இன்று கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாரிடம் பேசினோம். “எரிசக்தித்துறையின் செயலாளரான பீலா வெங்கடேசன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.பி.சி, 143, 448,454,352, 506 (i) ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவுசெய்தோம். அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அதனால்தான் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள், பங்களாவில் காவலாளி மற்றும் பீலா வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கான சி.சி.டி.வி- ஆதாரங்கள் உள்ளன. மேலும் ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோரின் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பங்களா தொடர்பான ஆவணங்கள், பீலா வெங்கடேசனின் பெயரில் உள்ள நிலையில் ராஜேஷ் தாஸ், தன் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தின் மூலம்தான் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் நேரிடையாக பங்களாவுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்தான், அவர்மீது வழக்கு பதிவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-யான ராஜேஷ் தாஸ் கைதுசெய்யப்பட்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb