புனே: கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், தற்போது சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தகுந்த நேரத்தில் விபத்து குறித்த தகவலை கொடுக்க தவறிய காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் ஐடி ஊழியர்களான அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 மணி நேரத்தில் அவருக்கு சிறார் நீதி வாரியம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையானது. மக்களும், எதிர்க்கட்சியினரும் இது குறித்து விமர்சித்தனர். இந்த சூழலில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனுக்கு மதுபானம் பரிமாறிய மதுபானக் கூட ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார், இந்த வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி நடந்ததாகவும். இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் காவல் துறை தரப்பில் காட்டப்பட்ட சுணக்கம் என்னவென்பது விசாரித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் எர்வாடா காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் ஜக்டேல் மற்றும் உதவி ஆய்வாளர் விஸ்வநாத் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு உகந்த நேரத்தில் தெரிவிக்க தவறியதாக காரணத்துக்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.