தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் அந்தந்த அரசுகளின் நிதியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இப்படியிருக்க, தெலங்கானாவில் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் எல்&டி நிறுவனத்தின் இயக்குநர் ஷங்கர் ராமன், காங்கிரஸ் அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தால் பெருநகரில் பெண் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், அதனால் கடன் சுமையை குறைக்க 2026-ல் பங்குகளை விற்கப் பரிசீலிப்பதாகவும் கூறியிருந்தார்.
அதற்கடுத்த சில நாள்களில் பிரதமர் மோடி, `ஒரு நகரத்தில் மெட்ரோவைக் கட்டுகிறீர்கள். பின்பு, அதே நகரத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வாக்குறுதியளிக்கிறீர்கள். இதன் பொருள், மெட்ரோ பயணிகளில் 50 சதவிகிதம் பேரை நீங்கள் வெளியே எடுக்கிறீர்கள்’ என மாநில அரசுகளை விமர்சித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து மோடியின் விமர்சனம் தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `பேருந்துகளில் இலவச பயணங்கள் கொடுப்பதால், மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை என பிரதமர் கூறியிருக்கும் கருத்து’ என கேள்வி கொடுக்கப்பட்டு, `சரியே, இலவச பயணத்துக்கு எதிரானது, நிலவரம் தெரியாமல் பேசுகிறார்’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் `அதிகபட்சமாக 55 சதவிகிதம் பேர் மோடி நிலவரம் தெரியாமல் பேசுகிறார்’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 25 சதவிகிதம் பேர் மோடியின் கருத்து சரி என்றும், 20 சதவிகிதம் பேர் இலவச பயணத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.