கோட்டயம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு சென்ற அரசு பேருந்தில் எடையாழம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வாலிபர், தனது மனைவியுடன் பயணம் செய்தார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. நேரம் செல்லச்செல்ல இருவருக்குமிடையேயான தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். பஸ்சை நடுவழியில் நிறுத்துமாறு கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கேட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழக நிறுத்தத்தில் மட்டுமே பஸ்சை நிறுத்தமுடியும் என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து அந்த வாலிபர் யாரும் எதிர்பாராத வகையில், பஸ்சின் ஜன்னல் வழியாக ஓடும் பஸ்சில் இருந்து வெளியே குதித்தார். இதனால் பஸ்சில் இருந்த வாலிபரின் மனைவி மற்றும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதில் வாலிபருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனைவியுடனான தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து வாலிபர் குதித்த சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.