பெங்களூரு: ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக, தனது எக்ஸ் தளத்தில், “சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நடத்தப்படும் ரேவ் பார்ட்டிகளால் நிரம்பியுள்ளது” என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளது.
காங்கிரஸ் குறித்து கர்நாடக பாஜக தனது எக்ஸ் தளத்தில், “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பெங்களூருவில் எங்கு பார்த்தாலும் ஒழுக்கக் கேடான பார்ட்டிகள் நடக்கின்றன. சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நடத்தப்படும் ரேவ் பார்ட்டிகளால் நிரம்பியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளது.
அதோடு, #BadBengaluru மற்றும் #CongressFailsKarnataka என்ற ஹேஷ்டேக்குகளுடன் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடம்பெற்றுள்ள போஸ்டரையும் பாஜக பயன்படுத்தி மாநில அரசை தாக்கியுள்ளது.
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, “பெங்களூருவை ‘உட்தா பெங்களூரு’ என்று எதிர்க்கட்சிகள் கூறுவது சரியல்ல. போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கண்காணித்து வருகிறோம். தற்போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெங்களூரு ரூரல் ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 19-ஆம் தேதி இரவு ‘ரேவ் பார்ட்டி’ நடந்தது. அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த நிகழ்வில் மொத்தம் 103 பேர் பங்கேற்றுள்ளனர். பங்கேற்பாளர்களில் 73 ஆண்களும் 30 பெண்களும் அடங்குவர்.
‘பார்ட்டி’ நடத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கு நடிகை உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. பார்ட்டியில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்தினரா என்று கண்டறிய, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. பார்ட்டியில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமாவும் பங்கேற்றார் என்று தகவல் வெளியானது. அங்கு சென்று நடத்திய சோதனையில், போதை மாத்திரைகள், ஹைட்ரோ கஞ்சா, கோகைன் உள்ளிட்டவை சிக்கின.