ஈரோடு: மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் போது என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று நினைத்தால் அச்சமாக இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு மட்டும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
பாஜக ஆட்சியில், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். தமிழகத்திற்கு வரும்போது, திருவள்ளுவர், கப்பலோட்டிய தமிழன் ஆகியோரை புகழ்ந்து பேசிவிட்டு, வடமாநிலங்களில் தமிழர்களை திருடர்கள் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
பிரதமர் மோடி தன்னை கடவுள் என்கிறார். மக்களுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவர்களை வெறி ஏற்றி வருகிறார். இட ஒதுக்கீடுக்கு எதிராக யார் இருப்பார்கள் என நாட்டு மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் தேர்தல் ஆணையம் சென்றுவிட்டது.
வாக்கு எண்ணிக்கை விவரம் அடங்கிய 17 சி படிவம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பதைப் பார்க்கும் போது சந்தேகம் ஏற்படுகிறது. மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் போது என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என அச்சமாக இருக்கிறது.
பாஜகவினர் முன்பு எம்எல்ஏ-க்களை வாங்குவார்கள். தற்போது வேட்பாளர்களையே வாங்கிவிடுகிறார்கள்.
தமிழக அரசிடம் கேட்காமல் கேரள அரசு சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவது கண்டனத்துக்கு உரியது. கேரள அரசு இந்த அணையைக் கட்டினால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதோடு, விவசாயமும் பாதிக்கப்படும். எனவே, அணை கட்டும் பணியை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.