விழுப்புரம்: விழுப்புரம் அருகே கண்ணில் பட்டவர்களை எல்லாம் காட்டுப் பன்றி கடித்து குதறியதால் கிராம மக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதில், படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரும்பு தோட்டத்துக்குள் மறைந்துள்ள காட்டுப் பன்றியை பிடிக்க வனத்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே சித்தானங்கூர் கிராமத்தில் இன்று வழக்கம்போல் பொதுமக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 150 கிலோ எடை கொண்ட காட்டுப்பன்றி ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதை கண்டதும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சிலர் வீடுகளை பூட்டி வீட்டுக்குள் முடங்கினர். அப்போது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஏழுமலை மனைவி செல்வி (38) என்பவரை காட்டுப்பன்றி மார்பு பகுதியில் கடித்ததில் காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது கணவர் ஏழுமலை (42) காட்டுப் பன்றியை தடுத்து துரத்த முயற்சித்த போது அவரது கால்களை கடித்து குதறியது.
அதன்பிறகு ஏழுமலை மகன் சிவகுமார் (45), நந்தன் மகன் ஜெகநாதன் (50), குப்புசாமி மனைவி விருத்தாம்பாள் (60), அஞ்சாபுலி மகன் விக்னேஷ் (25), தர்மலிங்கம் மகன் ராமமூர்த்தி(43) ஆகியோரை கை கால் மற்றும் வயிறு போன்ற இடங்களில் கடித்தது, பொதுமக்கள் தடி மற்றும் ஆயுதங்களைக் கொண்டு காட்டு பன்றியை துரத்தும் பொழுது அது மாமந்தூர் கிராமத்துக்குச் சென்று தர்மலிங்கம் மகன் பரசுராமன் (48) என்பவரை கடித்தது.
பன்றி கடித்து காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுப்பன்றி கடித்ததில் ஜெகநாதன் என்பவரின் கால் பகுதியிலும், விருத்தம்பாள் உடலிலும் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களின் கை கால்கள் மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்த இளைஞர்கள் பொதுமக்கள் பன்றியை துரத்தும் பொழுது அந்த பன்றி மீண்டும் சித்தானங்கூரில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்து கொண்டது.
இதனையறிந்த கிராம பொதுமக்கள் தடி மற்றும் கம்புகளுடன் கரும்பு தோட்டத்தை சுற்றி வளைத்து பன்றியை பிடிக்க முயன்ற போது, ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு(20) என்பவரை கடித்துக் குதறியது. அதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் காட்டுப்பன்றி சித்தானாங்கூர் கிராமத்தில் நுழைந்து தொடர்ந்து அட்டகாசங்கள் செய்தது. காட்டுப் பன்றியைப் பிடிக்க வனத் துறையினர் வரவில்லை எனக்கூறி சித்தானங்கூர் பொதுமக்கள் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறினர்.
பிறகு விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் சுரேஷ் சோமன், உளுந்தூர்பேட்டை வனச்சரகர் ரவி, திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் ராஜ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு படையினர் அட்டகாசம் செய்து வந்த காட்டுப்பன்றியை பிடிக்க முயற்சித்த போது ஒருவரை காட்டுப்பன்றி காலில் கடித்துவிட்டு தப்பிச் சென்றது. இதில் மயக்கம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிறகு கரும்புத் தோட்டத்தில் இருந்த காட்டுப் பன்றியை அதிகாரிகள் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.காட்டுப் பன்றி மறைந்துள்ள கரும்பு தோட்டத்தை சுற்றிலும் வலைகளை கட்டி, பன்றியை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.