பாரிஸ்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்துவதுபோல் பேசியுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். “எல்லா வேலைகளையும் ஏஐ அழித்துவிடும். எதிர்காலத்தில் வேலை செய்வது என்பது அவரவர் விரும்பி தெரிவு செய்துகொள்ளும் பொழுதுபோக்கு அம்சம் போல் ஆகிவிடும்” என்று எலான் மஸ்க் பேசியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.
பாரிஸில் வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய எலான் மஸ்க், “ஏஐ தொழில்நுட்பத்தால் அனைத்து வேலைகளும் அழிக்கப்படும். ஒருகட்டத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. ஆனால் அது மோசமான மாற்றம் என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சம் போல் ஆகிவிடும். மற்றபடி ரோபோக்கள் எல்லா சேவைகளையும் செய்துவிடும். உங்களுக்குத் தேவையான பொருட்களை அவையே கொண்டுவந்து கொடுக்கும்.
ஆனால் எதிர்காலத்தில் வேலை இல்லாமல் மனிதர்கள் உணர்வுபூர்வமாக எவ்வாறு தன்னிறைவு பெறுவார்கள் என்ற கேள்வி இருக்கிறது. கணினியும் ரோபோக்களும் நம்மைவிட வேலைகளை சிறப்பாகச் செய்யும் என்றால் நம் பங்கு என்னவாக இருக்கும்? நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமா?
இருப்பினும் நான் அப்போதும் மனிதர்கள் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். ஏஐ-க்கு நாம் அர்த்தம் கொடுப்போம் என நான் நம்புகிறேன்.
ஆனால் இந்த நிலை சாத்தியப்பட சர்வதேச உச்சபட்ச வருவாய் என்ற சூழல் உருவாக வேண்டும். இதனை சர்வதேச குறைந்தபட்ச வருவாயுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றார். ஆனால் இதுபற்றி அவர் ஆழமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
யுனிவர்சல் பேசிக் இன்கம் (Universal Basic Income) என்பது உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அதன் மக்களுக்கு அவரவர் சம்பாத்தியத்தை எல்லாம் கணக்கில் கொள்ளும் வழங்கும் நிதி ஆகும்.
மேலும் ஏஐ தொழில்நுட்பம் சமீப காலமாக வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் அவற்றை பொறுப்புடன் எப்படி பயன்படுத்திக் கொள்வது என பல நிறுவனங்களும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கின்றன என்றார்.
அதேபோல் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் மஸ்க் அறிவுரை கூறினார். சமூக ஊடகங்கள் ‘டோபமைன் மேசிமைசிங் ஏஐ’ புரோகிராமிங் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் அதனை குழந்தைகள் பயன்படுத்தும் நேரத்தை கண்காணிக்க வேண்டும் என்றார்.