“1971-ல் நான் ஆட்சியில் இருந்திருந்தால்..!" – பஞ்சாபில் பிரதமர் மோடி பேசியதென்ன?!

பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியலாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, முதல் மூன்று வாக்கியங்களை பஞ்சாபி மொழியில் பேசிவிட்டு,“குரு தேக் பகதூர் ஜி மற்றும் காளி மாதா ஜி ஆகியோரால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித நகரமான பாட்டியாலாவிலிருந்து பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது எனது அதிர்ஷ்டம். பஞ்சாப் மக்களுடன் எனக்கு ரத்தபந்தம் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை பாகிஸ்தான் சென்று மட்டுமே பார்க்க முடிகிறது.

பஞ்சாபில் மோடி

இது அனைவருக்கும் அவமானம். 1971-ல் நான் ஆட்சியில் இருந்திருந்தால், வங்கதேசப் போரின்போது பிடிபட்ட 90,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விடுவிப்பதற்கு ஈடாக, கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை மீட்டிருப்பேன். இப்போது அதைச் செய்ய முடியாது என்பதால், என்னால் முடிந்த அளவு குருக்களின் நிலத்திற்கு சேவை செய்துவருக்கிறேன். மேலும் பக்தர்கள் பெருமையுடன் தரிசிக்கக்கூடிய கர்தார்பூர் நடைபாதையைத் திறந்தேன். பஞ்சாபில் பா.ஜ.க ஊழியராக பாட்டியாலாவில் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன்.

பரதாரி கார்டனில் காலையில் நடைபயிற்சி செய்ததும், பாட்டியா சௌக் பகுதியில் நண்பர்களுடன் அரட்டை அடித்ததும் எனக்கு நினைவிருக்கிறது. காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் வகுப்பு மற்றும் சாதிவெறி கொண்ட கட்சிகள். இந்தியாவின் கலாச்சாரத்தை மேன்மைபாடுத்திய அனைத்தையும் வெறுக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த சில நாட்களிலேயே ராமர் கோயிலை காங்கிரஸ் கட்டியிருக்க வேண்டும். ஆனால் இப்போதும் அதை அவமதிக்கிறார்கள்.

அயோத்தி ராமர் கோயில் – மோடி

காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டு வெவ்வேறு கட்சிகளாக இருக்கலாம், ஆனால் அவை ஒரே கடையை நடத்துகின்றன… இந்த கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் பஞ்சாபில் என்ன சொல்லிக்கொண்டாலும், அவர்கள் ஒருவரையொருவர் தோளில் சுமந்துகொண்டு ஒன்றாக நடனமாடுகிறார்கள். தங்கள் குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றி ஒரு நாளைக்கு 10 முறை பொய் சொல்லக்கூடியவர்களால் இந்த மாநிலத்திற்கோ தேசத்திற்கோ எந்த நன்மையும் செய்ய முடியாது.

டிசம்பர் 26-ம் தேதியை குரு ஃபதேகர் சாஹிப்பின் தியாகத்தைப் போற்றும் வகையில், வீர் பால் திவாஸ் என்று அறிவித்தோம். இந்த தியாகத்தின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன் என்பது மக்களுக்குப் புரியவில்லை. பஞ்சாபில் உள்ளவர்கள் கூட அதை புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. குருவின் குழந்தைகளை நினைத்து நம் தாய்மார்களும், சகோதரிகளும் பல நாள்கள் விரதம் இருக்கிறார்கள். தரையில் தூங்குகிறார்கள்.

மோடி

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தியாகம் கேரளா, தமிழ்நாடு போன்ற இந்தியாவின் பிற பகுதி ​​மக்களுக்கு தெரியாது. சாஹிப்ஜாதாக்களின் இவ்வளவு பெரிய தியாகத்தைப் பற்றி என் நாட்டு மக்களுக்குத் தெரியாததை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் குருவின் குழந்தைகளின் தியாகத்தால் ஈர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி தர்பாரில் காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

சீக்கிய சகோதரர்கள் ஆப்கானிஸ்தானில் பிரச்னையில் இருந்தனர். நாங்கள் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தோம். ஆனால், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கும் புதிய குடியுரிமைச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. பஞ்சாப் எப்போதுமே விவசாயம் மற்றும் தொழில்முனைவில் தேசத்தை வழிநடத்தி வருகிறது. ஆனால் அதற்கு ஊழல்வாதிகள் என்ன செய்தார்கள்… பஞ்சாப் மாநிலம் அரசால், மணல் மாபியா, போதைப் பொருள் கடத்தல் கும்பல், துப்பாக்கி சுடும் கும்பல் போன்றவற்றால் நடத்தப்படுகிறது” எனப் பேசியிருக்கிறார்.

பகவந்த மான்

2022-ம் ஆண்டு நடைபெறவிருந்த பஞ்சாப் மாநிலத் தேர்தலுக்காக பிரசாரம் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்புக் கோளாறால் அவர் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி பஞ்சாப் பயணம் செய்திருக்கிறார். இந்தப் பயணத்தின் போதும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல விவசாய சங்கங்கள் தங்களது நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து தெரிவிக்க பிரதமரை சந்திக்க முயற்சிப்போம் என்று அறிவித்திருந்த நிலையில், அந்த அனைத்து விவசாயிகளும் நகருக்குள் நுழையும் பல இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.