6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. இவைதவிர, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ம் தேதி சென்னையில் நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய சுகாதார பணிகளின் திட்ட இயக்குநர் சில்பா பிரபாகர் சதீஷ், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக பணிகளை முடிக்கவும், பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 பகுதிகளில் 2-ம் கட்டமாக பணிகளை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ‘பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக் ஷா யோஜனா’ உள்ளிட்ட மத்திய அரசின் நிதி பங்கீட்டின் கீழ் இந்த புதிய மருத்துவ கல்லூரிகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கு 25 ஏக்கர் நிலத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான உபகரணங்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய விவரங்களை சேகரிப்பது குறித்தும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்துக்கு கூடுதலாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவருவது குறித்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் இடம் தேர்வு மற்றும் தேவையான இடத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்தும் தயார் நிலையில் வைத்த பின்னர் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படும். அதன் பின்னர், 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். தற்போது ஆரம்ப கட்ட பணிகள் தான் நடைபெறுகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.