இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
கடந்த நவம்பர் மாதத்தோடு முடிவடைந்த டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்குப் பல முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக்க பிசிசிஐ முனைப்புக் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பல நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரிக்கி பாண்டிங், “தலைமை பயிற்சியாளராக இருந்தால் 11 மாதங்கள் வரை நான் பணியாற்ற வேண்டும். எனது தற்போதைய வாழ்க்கை முறைக்கு இது செட் ஆகாது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர், பிசிசிஐ-யில் நிறைய அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்குச் சரியான நபரைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இந்தப் பொறுப்பிற்கு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். பிசிசிஐ குழுவும் சில முன்னாள் வீரர்களை தேர்வுப் பட்டியலில் வைத்திருக்கிறது.
இந்தச் சூழலில் நான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் கே.எல்.ராகுல் என்னிடம், “ஐபிஎல்லில் இருக்கும் அரசியல் அழுத்தங்களை விட 1000 மடங்கு பெரிது பிசிசிஐ-யின் அரசியல் அழுத்தங்கள். அது உங்களுக்கு செட்டாகாது’ என்றார். அது நல்ல அறிவுரையாக என் மனதில் பட்டது. அதுமட்டுமின்றி நான் ஆஸ்திரேலிய அணியில் பணி செய்து களைத்துவிட்டேன். அதனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு பற்றி யோசிக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன்” என்று பேசியிருக்கிறார்.