ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணியின் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவும் 17 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த அணியில் ஐபிஎல் தொடங்கியது முதல் ஆடிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்த ஆண்டும் கனவாகே போய்விட்டது. அவரும் இளவு காத்த கிளி போல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்காக காத்துக் கொண்டே இருக்கிறார். எப்போது இது நடக்கும் என்பது மட்டும் மர்மமாக இருக்கிறது. கிரிக்கெட் முன்னாள் வீரர்களைப் பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலியை முன்னிறுத்துவதை விட்டு, அவரை கடந்து சிந்திக்க தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டசர்சன் இது குறித்து பேசும்போது, ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் சிறப்பான பேட்டிங் ஆடுகிறார் என்பதில் எனக்கு துளியும் மாற்றுக்கருத்தில்லை, இந்த ஆண்டும் அதிக ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி தான் முதல் இடத்தில் இருக்கிறார், அவரிடம் தான் ஆரஞ்சு தொப்பியும் இருக்கிறது என கூறியிருக்கும் பீட்டர்சன், இது ஆர்சிபி அணியை சாம்பியன் பட்டத்தை வெல்ல வைக்காது என்றும் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு விராட் கோலி ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சேர வேண்டும், அது தான் அவருக்கும் சிறந்ததாக இருக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நல்லது என தெரிவித்துள்ளார். பீட்டர்சனின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 17 ஆண்டுகள் காத்திருந்ததுபோதும், விராட் கோலியை அடுத்த ஆண்டு மெகா ஏலத்துக்கு முன்பு ஆர்சிபி அணி விடுவித்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அவர் விரும்பினால் தனது சொந்த மாநில அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்லட்டும், அந்த அணியை சாம்பியன் பட்டத்தை வெல்ல வைக்கட்டும் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆர்சிபி அணி ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர். விராட் கோலி ஆர்சிபி அணியிலேயே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதுடன், இதற்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களை விமர்சித்துக் கொண்டும் உள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு முன்பாக மிகப்பெரிய ஏலம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் அணிகள் தாங்கள் ரீட்டெயின் செய்ய உள்ள பிளேயர்களின் லிஸ்டை தெரிவிக்க வேண்டும். அதில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாக இருக்கிறது.