சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி இன்று நடக்கிறது. இதில் வெல்லும் அணி இதே சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் மோதும்.
இந்நிலையில், கொல்கத்தாவுக்கும் ஹைதராபாத்துக்கும்தான் இறுதிப்போட்டி என்பதாக ஏற்கெனவே சேப்பாக்கம் மைதானத்தில் பேனர் வைக்கப்பட்டுவிட்டதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் ஐ.பி.எல் ஸ்க்ரிப்டட் எனவும் ஏற்கெனவே இறுதிப்போட்டி தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றும் சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். பரவும் அந்தப் புகைப்படம் உண்மையானதுதானா, ஐ.பி.எல் ஸ்க்ரிப்டட்தானா, உண்மை என்ன?
சேப்பாக்கத்தில் நடக்கும் இறுதிப்போட்டி கொல்கத்தாவுக்கும் ஹைதராபாத்துக்கும்தான் என பேனர் வைக்கப்பட்டிருப்பதாகத்தான் அந்தப் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அந்தப் புகைப்படம் உண்மையானதுதான், அது சேப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்தான். ஆனால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. ஏனெனில், மைதானத்தில் பிளே ஆஃப்ஸூக்குத் தகுதிபெற்ற நான்கு அணிகளின் கேப்டன்களுக்குமே வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இணையத்தில் பரவும் புகைப்படத்தைப் போலவே மைதானத்தின் இன்னொரு புறத்தில் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நடுவிலும் `The Finals’ என்கிற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்தால் ராஜஸ்தானுக்கும் பெங்களூருவுக்கும்தான் இறுதிப்போட்டி என்பது போலத் தோன்றும். ஆனால், பெங்களூருதான் ஏற்கனவே வெளியேறிவிட்டதே?!
உண்மை என்னவெனில் மைதானம் முழுக்கவும் வரிசையாக நான்கு அணிகளின் கேப்டன்களுக்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு புறத்தில் உள்ள பேனரை மட்டும் புகைப்படம் எடுத்து இணையத்தில் சுற்றலில் விட்டுவிட்டார்கள். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு கன்னாபின்னாவென ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது.
பிளே ஆஃப்ஸ் மொத்தமும் பிசிசிஐயின் கட்டுப்பாட்டில்தான் என்பதால் மைதானத்தின் ஒரு சுவரில் வரையப்பட்டிருக்கும் தோனியின் ஓவியத்தைக் கூட பெரிய பேனரைக் கொண்டு மறைத்திருக்கிறார்கள்.
உங்களின் கணிப்புப்படி கொல்கத்தாவுடன் இறுதிப்போட்டியில் ஆடும் அணி எதுவாக இருக்கும் என்பதை கமென்ட் செய்யுங்கள்.