ஈரோட்டிலிருக்கும் பெரிய கல்வி தந்தை (தியாகராஜன்) நடத்தும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார் கனகவேல் (ஹிப்ஹாப் ஆதி). சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் ஜாதகத்தில் பிரச்னை இருப்பதாக குடும்ப ஜோதிடர் எச்சரிக்கிறார். இதைக் கேட்கும் அவரது தாய், எந்த அநீதியையும் தட்டி கேட்காத வகையில் அவரை வளர்க்கிறார். பள்ளியில் உடன் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் வானதியிடம் கனகவேல் காதல் கொள்ள, அவர்களின் நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்படுகிறது. மறுபுறம் அவர்களின் எதிர்வீட்டிலிருக்கும் இளம்பெண் (அனிகா சுரேந்திரன்) பாலியல் ரீதியான சீண்டல்களைச் சந்திக்கிறார். அந்தப் பிரச்னையில் கனகவேல் உதவ முற்பட, அதனால் அவரின் வாழ்வில் நடக்கும் சிக்கல்கள் என்னென்ன, அனிகாவின் பிரச்னைகளுக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைத்ததா என்பதே படத்தின் கதை.
எல்லோருக்கும் பிடித்த பி.டி வாத்தியாராக துருதுருவென படம் நெடுகிலும் ஆடிப்பாடி ஓடிக்கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி, நடிப்பு ரேஸில் மட்டும் மூச்சுவாங்கிக்கொண்டு முன்னேற்றமில்லாமல் அதே இடத்திலே நிற்கிறார். சண்டைக் காட்சிகளில் தேறி இருந்தாலும் எமோஷனலான காட்சிகளில் அவரது நடிப்பு “கொஞ்சம் நடிங்க பாஸு” ரகமே. வில்லனாக வரும் தியாகராஜன் கன்னங்கள் துடிப்பது மட்டுமே வில்லன் மேனரிசம் என நம்மையும் நம்பவைக்கிறார். அதைத் தவிர சம்பிரதாயத்துக்குக்கூட வேறு ரியாக்ஷன்கள் வர மறுக்கின்றன. டெம்ப்ளேட் நாயகியாகக் காஷ்மீரா பர்தேஷ்க்குப் பெரிதாக வேலையில்லை. அவரது தந்தையாக வரும் பிரபுவுக்கு ஒதுக்கப்படும் திரை நேரம் கூட அவருக்கு ஒதுக்கப்படவில்லை.
ஹிப்ஹாப் ஆதியின் தாயாக பிரியதர்ஷினி கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மைக் டைசன் ரசிகராக வரும் ராஜா ஒரு சில காட்சிகளில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இளவரசுவின் அனுபவம் யதார்த்தம் பேச, அதே பெண்ணின் தாயாக நடித்துள்ள வினோதியின் நடிப்பில் செயற்கைத்தனம் மேலோங்கி காணப்படுகிறது. கத்துவது, அலறுவது மட்டுமே நடிப்பில்லை மேடம்! சிறப்புத் தோற்றத்தில் கே.பாக்யராஜ் சில ஒன்லைனர்களை போட்டுச் சிரிக்க வைக்க, வழக்குரைஞராக வரும் மதுவந்தி அந்தக் கதாபாத்திரத்துக்குச் சரியான தேர்வாக அமைகிறார்.
ஒரு கமர்ஷியல் படத்துக்குத் தேவையான சிறப்பான ஒளிப்பதிவினை வழங்கியிருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். அதற்கு ஸ்வப்னா ரெட்டியின் ஆடை அலங்காரமும் பெரியளவில் உதவியிருக்கிறது. சஸ்பென்ஸுடன் வெட்டப்பட்ட இரண்டாம் பாதியின் நேரத்தைப் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே இன்னுமே குறைத்திருக்கலாம். பள்ளி, கல்லூரி வளாகம் காட்சிப்படுத்தப்பட்ட விதம், நீதிமன்ற செட்டப் எனக் கலை இயக்குநர் ஏ.அமரன் படத்தின் தயாரிப்பு தரத்தினைக் கூட்டியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழாவின் 25வது படமான இதில், பின்னணி இசையில் வரும் முருகர் பாடல் கவனம் பெறுகிறது. அதேபோல நடன இயக்குநர் சந்தோஷின் சிறப்பான வடிவமைப்பில் குழந்தைகள் பட்டையைக் கிளப்பும் ‘நக்கல் பிடிச்சவன்’ பாடலும் ஈர்க்கின்றது. ஆனால் அனைத்து பாடல்களிலும் பாடல் வரிகளுக்கு இன்னுமே கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
கதையின் மைய கருவுக்கு வருவதற்கு முன்பு வார்ம்-அப் செய்வது போல முதல் அரை மணிநேரம் சிரிக்க வைக்க மட்டுமே முயல்கிறார்கள். ஒரு சில இடங்களில் அது வேலை செய்திருக்கிறது என்றாலும், பள்ளிச் சிறுவன், நாயகனுக்குப் போட்டியாக ஆசிரியரைக் காதலிப்பதாக எழுதப்பட்ட கிரிஞ்ச் வகையறா காட்சிகள் எல்லாம் நகைச்சுவையில் சேராது பாஸு! பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம்சாட்டுகிற ஆணாதிக்க சமூகத்தைக் கேள்வி கேட்பது என்பது சமூக அக்கறையின் பிரதிபலிப்பாக இருந்தாலும், அதைத் திரைக்கதையாகக் கொடுத்த விதத்தில் சறுக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால். அதிலும் ஒரு தெருவே பெண்ணைக் குற்றம் சொல்லும் காட்சியில் அதீத செயற்கைத்தனமே வெளிப்படுகிறது. இடைவேளை மாஸ் காட்சி ஒரு வித ஆர்வத்தைக் கிளறினாலும் இரண்டாம் பாதியில் அதைத் தக்க வைக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள்.
பிரதான கதையை நோக்கி நகரும் படம் கோர்ட் ரூம் டிராமாவாக மாறுகிறது. இம்மாதிரியான டிராக்குகளில் சுவாரஸ்யமாக எழுதப்படும் வாதங்களும், எதிர்வாதங்களும் சுத்தமாக மிஸ்ஸிங். இருந்தும் பாக்யராஜ், பிரபு போன்ற அனுபவ நடிகர்கள் அதனைச் சற்றே தாங்கிச் சென்றிருக்கிறார்கள். பெண்களின் பாலியல் சீண்டல்களைப் பற்றி வாதாடும் சீரியஸான காட்சி வடிவமைக்கப்பட்ட விதம், அதற்கான அழுத்தத்தைத் தராமல் சாதாரண பில்டப் காட்சியாக முடிந்தது படத்தின் பெரிய பலவீனம். க்ளைமாக்ஸில் நாயகனைப் புத்திசாலி என்று நிறுவுவதற்காகவே ஒரு மாபெரும் ட்விஸ்ட்டை திணித்திருக்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்விலிருந்து அதைப் பார்த்தால், அத்தனை நாள்கள் ஏற்பட்ட மனஅழுத்தம், சோகம் ஆகிய உணர்வுகளுக்கு மதிப்பில்லை என்றாகிவிடுகிறது. இது சுத்த போங்கு பாஸ்! அதிலும் படம் முடிந்த பின்னர் யோசித்துப் பார்த்தால் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகளும் எட்டிப்பார்க்கின்றன.
கமெர்ஷியல் படத்தில் கருத்தைச் சொருகிப் பாடமெடுக்கும் இந்த பி.டி வாத்தியாரின் பீரியட் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை!