அதானி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: சர்வதேச அமைப்புகள் கடிதம்

புதுடெல்லி: அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருமாறு 21 சர்வதேச அமைப்புகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி உள்ளன.

இது தொடர்பாக ‘‘தரமற்ற நிலக்கரியால் தமிழக அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு’’ என்ற தலைப்பில் நேற்று நமது ‘‘இந்து தமிழ் திசை’’ நாளிதழில் செய்தி வெளியானது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்பன்னாட்டு புலனாய்வு நிருபர்கள் அமைப்பான திட்டமிட்ட குற்றம்மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் திட்டம் (ஓ.சி.சி.ஆர்.பி.) வெளியிட்ட அதானி நிலக்கரி இறக்குமதி குறித்த ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரிட்டனிலிருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அதில், கடந்த 2013-ம் ஆண்டில் அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து குறைவான விலைக்கு வாங்கி அதனை தரம் உயர்ந்த நிலக்கரி எனக் கூறி மும்மடங்கு அதிகமான விலைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) விற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதில், ரூ.6,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனை மிகவும் விரைவாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரக்கோரி சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையம்,பேங்க்ட்ராக், பாப் ப்ரவுன் பவுண்டேஷன், கல்ச்சர் அன்ஸ்டைன்ட், ஈகோ, எக்டிங்ஷன் ரிபெல்லியன், எர்த் ஆஸ்திரேலியா பிரண்ட்ஸ், லண்டன் மைனிங் நெட்வொர்க், மேக்கே கன்சர்வேஷன் குழு, மார்கெட் போர்ஸ், மணி ரிபெல்லியன், மூவ் பியாண்ட் கோல், கிளைமேட் ஆக்ஷன் நவ் சீனியர்ஸ், ஸ்டேண்ட் டாட் எர்த், ஸ்டாப் அதானி, சன்ரைஸ்இயக்கம், டிப்பிங் பாய்ண்ட், டாக்ஸிக் பாண்ட்ஸ், ட்ரான்ஸ் பரன்ஸி இண்டர்நேஷனல் ஆஸ்திரேலியா, டபிள்யூ அண்ட் ஜேநாகானா யார்பைன் கல்சுரல் கஸ்டோடியன் மற்றும் குயின்ஸ்லாந்து கன்சர்வேஷன் கவுன்சில் ஆகிய 21 சர்வதேச அமைப்புகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளன.

அதேநேரம், அதானி நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திஉள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்இந்த செய்தியை மேற்கோள்காட்டி நிலக்கரி முறைகேடு குறித்துநாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இந்த குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘நிலக்கரியின் தரப் பரிசோதனை பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டது. சுங்க அதிகாரிகள், டான்ஜெட்கோ அதிகாரிகளாலும் நிலக்கரியின் தரம் சுயாதீனமாக பரிசோதிக்கப்பட்டது. எனவே, தரம் குறைந்த நிலக்கரி என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் நியாயமற்றது மட்டுமல்ல, முற்றிலும் அபத்தமானது’’ என்றார்.

குற்றச்சாட்டு ஆதாரமற்றது, நியாயமற்றது, முற்றிலும் அபத்த மானது என்கிறது அதானி குழுமம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.