ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற்றது. இதில் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவியது.
இதில், சந்திரபாபு நாயுடு ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். இது இவருக்கு சாதகமாக உள்ளதென்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின்சகோதரியான ஷர்மிளாவை காங்கிரஸ் களத்தில் இறக்கியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே காங்கிரஸில் இருந்து தான் பிறந்தது.
அதில் உள்ள அனைவரும் காங்கிரஸ் கட்சியினர்தான். அப்படி இருக்கையில், இம்முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அதிருப்தியாளர்கள் அனைவரும் காங்கிரஸுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் வாக்களித்திருப்பார்கள் என கூறப்படுகிறது
வரும் ஜூன் 4-ம் தேதி ஆந்திர மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரியவரும். ஆனால், ஆந்திராவில் இரு தரப்பினரும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என உறுதியாக கூறி வருகின்றனர். ஆனால், தேர்தல் கணிப்பாளர் பிரஷாந்த் கிஷோர் உட்பட பல கருத்து கணிப்புகளும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே வாய்ப்பு என கூறி உள்ளனர். இம்முறைஎப்போதும் இல்லாத வகையில், தபால் வாக்குகளும் அதிகமாக பதிவாகி உள்ளன.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் மொத்தம் 5 லட்சத்து 39,189 வாக்குகள் பதிவாகி உள்ளன.இதற்கு முன் இவ்வளவு தபால் வாக்குகள் பதிவானதில்லை என கூறப்படுகிறது. ஆதலால் அரசு ஊழியர்கள் அதிக உற்சாகத்தோடு வாக்களித்துள்ளனர்.
தங்களுக்கு மாதம் 1-ம் தேதி சரியாக ஊதியம் தரவில்லை எனும் கோபத்தின் வெளிப்பாடாக இருக்குமோ எனும் சந்தேகமும் இதனால் எழுகிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.