புதுடெல்லி: . மக்களவைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், “அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காலை 11 மணி நிலவரப்படி 25.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. டெல்லியில் 21.69%, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 36.88 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நிர்மல் பவனில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வாக்களித்தனர்.
பின்னர் தனது தாயுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து “நானும், அம்மாவும் எங்கள் வாக்கை செலுத்தி மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் பங்களித்தோம். நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வந்து உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என இந்தியில் பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி போன்ற 7 மக்களவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
தலைநகர் டெல்லியில் இன்று காலை தொடங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் மகள் மிராயா மற்றும் மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா, கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம் காம்பீர், டெல்லி பாஜக தலைவர் பன்சூரி ஸ்வராஜ், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எனப் பலரும் வாக்களித்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவாலும் வாக்களித்தனர். பின்னர் பேட்டியளித்த அவர், “மக்கள் பெருமளவில் வாக்களிக்க வருகின்றனர். அவர்கள் சர்வாதிகாரம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக வாக்களிக்க வருகின்றனர்” என்றார்.
வாக்களித்த பின்னர் பிரியங்காவின் மகள் மிராயா அளித்த பேட்டியில், “சோம்பலாக இருந்துவிடாதீர்கள். வாக்களிக்க வாருங்கள். மாற்றத்துக்காக வாக்களியுங்கள்” என்றார். மிராயா முதன்முறை வாக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரைஹான் ராஜீவ் வத்ரா கூறுகையில், “இது முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்களித்து நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வாக்களியுங்கள்” என்றார்.