காசா,
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் சுமார் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 250-க்கும் அதிகமானோரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு இழுத்து சென்றனர்.இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போரை தொடங்கியது.
இந்த போர் 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் காசாவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 80 ஆயிரம் படுகாயம் அடைந்துள்ளனர்.இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.ஒரு வார காலம் தொடர்ந்த இந்த போர் நிறுத்தத்தின்போது 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்த பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இந்த நிலையில் ஹமாஸ் வசம் உள்ள எஞ்சிய 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்க இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர சர்வதேச நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது.இதனிடையே கடந்த வாரம் காசாவில் இஸ்ரேலை சேர்ந்த 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் 3 பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதும், அதன்பின்னர் அவர்களது உடல்களை ஹமாஸ் அமைப்பினர் காசா பகுதிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இந்த நிலையில் காசாவில் இருந்து மேலும் 3 பயண கைதிகளின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேலை சேர்ந்த ஹனான் யாப்லோங்கா, மைக்கேல் நிசென்பாம் மற்றும் ஓரியன் ஹெர்னாண்டஸ் ரேடோக்ஸ் ஆகியோரின் உடல்கள் காசாவில் கண்டெடுக்கப்பட்டன. அக்டோபர் 7-ந் தேதி தெற்கு இஸ்ரேலின் மெபல்சிம் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் ஹமாஸ் அமைப்பினரால் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டன” என்றனர்.