பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களுக்கு நடுவே தனியார் ஊடகங்களுக்கும் பேட்டியளித்துவருகிறார். அந்த வரிசையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்த மோடி, `அந்தப் பரமாத்மாதான் என்னை இந்த உலகத்துக்கு அனுப்பியிருக்கிறார். ஏதோவொரு விஷயத்தை நடத்திமுடிக்கவே கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

பயலாஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் ஆற்றல், சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலைக் கொடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார்.
மோடியின் இந்தப் பேச்சு சமீபத்தில் வைரலாகவே, அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் மோடியை விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `கடவுள் தன்னை அனுப்பிவைத்ததாகக் கூறும் மோடிதான், கொரோனா சமயத்தில் மக்கள் இறந்துகொண்டிருந்தபோது செல்போனில் டார்ச் லைட் அடிக்கச் சொன்னார்.

கடவுளால் அனுப்பிவைக்கப்பட்ட இந்த மனிதர் அதானி, அம்பானி உட்பட தனது 22 நண்பர்கள் சொல்வதை மட்டுமே செய்கிறார். ஆனால், ஏழைகளுக்கான மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு பற்றி கேட்டால் மட்டும் அமைதியாகிவிடுகிறார்’ என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தற்போது வேறொரு தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கும் மோடி, தன்னை கடவுள்தான் அனுப்பிவைத்தார் என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “என்னைத் துஷ்பிரயோகம் செய்பவர்களையும் நீங்கள் பார்க்கலாம், எனக்காக நல்ல விஷயங்களைச் செய்பவர்களையும் நீங்கள் பார்க்கலாம். எனவே, தங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்துபவர்கள் ஏமாறவோ, புண்படவோ கூடாது என்பதை உறுதிசெய்வதே எனது கடமை. சிலர் என்னை கிரேஸியாக நினைக்கலாம். இருந்தாலும், அந்தப் பரமாத்மா ஒரு நோக்கத்துக்காகவே என்னை அனுப்பியிருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால்தான் கடவுளுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன். நிறைய வேலைகளைச் செய்ய கடவுள் எனக்கு வழிகாட்டுகிறார். ஆனாலும், கடவுள் தனது அடுத்தடுத்த திட்டங்களை வெளிப்படுத்தாமல் என்னைச் செய்ய வைக்கிறார். அடுத்த திட்டம் என்னவென்று நேரடியாக அவருக்கு என்னால் போன் செய்யவும் முடியாது” என்று மோடி கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88