IPL 2024 Final Match: 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தொடங்கிய நிலையில், மே 26ஆம் தேதியான நாளையுடன் நிறைவடைகிறது. சுமார் 2 மாத காலம் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
10 அணிகள் மோதிய லீக் சுற்றில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. தொடர்ந்து, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், நாளைய இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. தொடரின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை கைக்கொண்டன. இரு அணிகளும் அசால்ட்டாக 250 ரன்களை கடந்து கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
முரட்டுத்தனமான பேட்டிங்
சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, மார்கரம், கிளாசென், நிதிஷ் ரெட்டி, திரிபாதி என அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் கேகேஆர் அணியின் பேட்டிங் வரிசையோ இன்னும் பயங்கரமாக இருக்கிறது. சுனில் நரைன் – பில் சால்ட் ஜோடிதான் கேகேஆர் அணி இறுதிப்போட்டி வரை வந்ததற்கு முக்கிய காரணம். பில் சால்ட் நாடு திரும்பிய நிலையில், குர்பாஸ் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். அவரும் அதிரடிக்கு பெயர் பெற்றவர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களை தவிர வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரஸ்ஸல், ரமன்தீப் சிங் என நீண்ட பேட்டிங் வரிசையை கேகேஆர் வைத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் கூட குவாலிஃபயர் 1 போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார்.
சமபலம் வாய்ந்த அணிகள்
பேட்டிங்கில் முரட்டுத்தனமான அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் பந்துவீச்சில் புத்திசாலித்தனமான வீரர்கள் இரு முகாம்களிலும் நிறைந்துள்ளனர். கேகேஆர் அணியை பொறுத்தவரை நரைன், சக்ரவர்த்தி, ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஆவார். ரஸ்ஸலும் ஓரிரண்டு ஓவர்களை வீசுவார் என்பதால் பந்துவீச்சிலும் பலமாகவே உள்ளது. சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது ஆகியோர் முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர். உனத்கட், மயங்க் மார்க்கண்டே ஆகியோரும் இவர்களுக்கு சேப்பாக்கத்தில் கைக்கொடுக்க வாய்ப்புள்ளது. இரு அணிகளும் இப்படி பலம் வாய்ந்து காணப்படுவதால் எந்த அணி வெற்றி பெறும் என கணிக்கவே முடியாமல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதால் எதிர்பார்த்து வரும் சூழலில், சென்னையில் தற்போது திடீரென மழை பெய்திருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மழை வந்தால் இறுதிப்போட்டி என்னவாகும்?
சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் தற்போது மழை பெய்து வருகிறது. ஒருவேளை நாளையும் போட்டியின் போது மழை வந்தால் என்னவாகும் என்பதை இதில் விரிவாக காணலாம். நாளை போட்டியின் போது மழை குறுக்கிட்டால் நள்ளிரவு 12.26 மணியையும் தாண்டி மழை நீடித்தால் போட்டி அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்படும். அதாவது மே 27ஆம் தேதி திங்கட்கிழமை அன்று போட்டி தொடரும். அன்றைய தினமும் போட்டி நேரத்தை தாண்டி 120 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கும். மழை அதை தாண்டியும் பெய்தால் சூப்பர் ஓவர் வைத்தாவது முடிவு அறிவிக்கப்படும். சூப்பர் ஓவரும் அன்று வைக்க முடியவில்லை என்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணியே சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள். அதன்படி, அந்த சூழல் ஏற்பட்டால் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும், கோப்பை பகிர்ந்தளிக்கப்படாது.