புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியும் அடங்கும்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிக்கு நிறைவடையும். மக்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனநாயக கடமையாற்றினார். காலை 9 மணியளவில் டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார். மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தங்கர் இருவரும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தங்களது வாக்கைச் செலுத்தினர்.