சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமுல்படுத்தியது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2025-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்குககளை விசாரித்த உயர் நீதிமன்றம், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.