தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிறந்த நாள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளான நேற்று கொண்டாடப்பட்டது. வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதை தனித்தமிழ் இயக்கம் தொடங்கி தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர் மறைமலை அடிகள்தான் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தினார்.
1935-ம் ஆண்டு ‘திருவள்ளுவர் திருநாள் கழகம்’ என்ற அமைப்பு சார்பில் மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (தமிழில் வைகாசி மாதம்) மறைமலை அடிகளை தலைவராகக் கொண்டு ‘திருவள்ளுவர் திருநாள் கூட்டம்’ என்ற பெயரில் திருவள்ளுவர் பிறந்த நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. பெரும்புலவரும் திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவருமான கா. நமச்சிவாய முதலியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தெ.பொ. மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மறைமலை அடிகள், ‘ கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்’’ என்று குறிப்பிட்டார். திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் 1935 மே 18-ம் தேதி சென்னையில் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று வள்ளுவரை வழிபட்டனர். ஆண்டுதோறும் வைகாசி அனுஷத்தில்தான் மயிலை திருவள்ளுவர் கோயிலில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு நடக்கிறது.
அதையொட்டி, திருவள்ளுவர் கோயிலில் நேற்று பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். மாலையில் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடையும் திருநீறும் ருத்திராட்சமும் அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது திருவள்ளுவரை இந்து மதத்தைச் சேர்ந்தவராக சித்தரிக்கும் முயற்சி என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
கவியரசு கண்ணதாசன் 1970-களின் ஆரம்பத்தில் இந்து மதத் தத்துவங்கள் பற்றியும் அவை நம் வாழ்க்கையில் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றியும் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற பெயரில் தொடர் கட்டுரை எழுதினார். பின்னர், அது நூலாகவும் வெளிவந்தது. அந்தத் தொடரில் ‘வள்ளுவர் ஓர் இந்து’ என்று திருக்குறளை மேற்கோள் காட்டி தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் கண்ணதாசன்! அதிலிருந்து சில பகுதிகள் இங்கே..
`இறைவன்’ என்ற சொல் `கடவுள்’ என்ற பொருளில் வள்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாவது குறளில், ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ என்றும், பத்தாவது குறளில்,
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’ – என்றும், அது ஆளப்படுகிறது. கடவுளை `இறைவன்’ என்று பௌத்தர்களோ, முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வள்ளுவன் கூறியிருக்கிறான். மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ – என்ற குறளில் வரும், `வானுறையும் தெய்வம்’ இந்துக்களுக்கு மட்டுமே உண்டு. தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக் கொள்வதில்லை. பிறவியைப் `பெருங்கடல்’ என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால், நான் முன்பு சொன்ன அந்தக் குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது.
இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை, தொட்ட இடமெல்லாம், இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால், அவரும் ஓர் இந்துவே என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும், `இறைவா’ என்றுதான் சொல்லி இருப்பார்.
அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன. ஆகவே, தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே ஒரு தமிழனே என்பது எனது துணிபு.