பெங்களூரு,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது. நடப்பு சீசனின் ஆரம்பத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறிய அந்த அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனால் இம்முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர்.
ஆர்சிபி அணியின் வேகத்தை பார்த்துதான் தாங்களும் குவாலிபயர் 1 போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியதாக கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்தார். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு தொடர்ந்து 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.
இந்நிலையில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று வேகத்தைப் பெற்றால் மட்டும் போதாது என ஆர்சிபி தோல்வி குறித்து கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- “நான் கேப்டனாக இருந்தபோது கூட வேகம் என்ற வார்த்தையை நாங்கள் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் உண்மையில் போட்டி நாளன்று நீங்கள் களத்தில் எந்தளவுக்கு விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். குறிப்பாக பயமின்றி தைரியத்துடன் விளையாடும் அணிக்கே கடைசியில் சாதகம் கிடைக்கும். ஏனெனில் பேட் அல்லது பந்துக்கு வேகம் என்பது தெரியாது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிக்கும் 10வது இடத்தை பிடிக்கும் அணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவேளை அந்த 2 அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். அதில் பத்தாவது இடத்தை பிடித்த அணி முதலிடத்தை பிடித்த அணியை தோற்கடித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதனாலயே ஐபிஎல் என்பது டி20 உலகக் கோப்பைபோல உலகில் மிகவும் கடினமான தொடராக இருக்கிறது. எங்கள் அனைவருக்கும் ஒரே ஏலத்தொகையே கிடைக்கிறது. அனைவரும் இங்கே நல்ல அணியையே அமைக்கின்றனர்” என்று கூறினார்.