நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தின் காரணமாகவே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் 5,320 மில்லியன் ரூபா இலகு கடன் வசதியின் கீழ், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

புதிய கட்டட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில், வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், நாட்டின் தற்போதைய ஜனாதிபதியின் காலத்திலேயே அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறினார். அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், சிறந்த பொருளாதார நிலைமை ஏற்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக அவர் காணப்படுவதோடு, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண முடியாது போன நிலையில், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பொருளாதார சிக்கலுக்கும் ஜனாதிபதி அவர்கள் தீர்வு கண்டதாக ஆளுநர் குறிப்பிட்டார். சிறந்த தொலைநோக்கு சிந்தனையுடன் செயற்படும் நாட்டின் தலைவரின் பணிகளை, வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி முழு நாட்டு மக்களும் மறக்க கூடாது என வடக்கு மாகாண  ஆளுநர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.