தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுலகத்திற்கு வெள்ளை நிறக் காரில் டிப்டாப் நபர் ஒருவர் வந்தார். வரவேற்பறைக்குச் சென்ற அவரை வரவேற்பாளர் அறையில் இருந்த காவலர்கள் வரவேற்றனர். “யார் சார் நீங்க? யாரைப் பார்க்கணும்” எனக் கேட்டுள்ளனர். அதற்கு, ”என்னோட பேரு டாக்டர் பாஸ்கரன். நான் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி. எஸ்.பி சார் இருக்காரா?அவரைத்தான் பார்க்கணும்” எனக் கூறியுள்ளார்.
வரவேற்பறையில் இருந்த காவலர்கள், அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். அதற்கு அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்ந்த காவலர்கள், தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் போலி நீதிபதி என்பது தெரிய வந்தது. சென்னை கொட்டிவாக்கம், கற்பகம்மாள் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பதும், அவர் நீதிபதி போல நடித்து பொது ஊழியரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. விசாரணையில் தான் ஒரு ஆடிட்டர் எனவும் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து வரவேற்பறையில் பணியில் இருந்த காவலர் மாரியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், சிப்காட் காவல் நிலைய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர், திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு பிரச்னை தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்திற்குச் சென்று தனக்குச் சாதகமாக செயல்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.
“நீங்க சொல்லுற மாதிரியெல்லாம் செய்ய முடியாது” எனக்கூறி அனுப்பியுள்ளனர் போலீஸார். இதனையடுத்துதான் மாவட்ட எஸ்.பியை சந்தித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மீது புகாரளிக்க வந்தபோது தன்னை நீதிபதி எனக்கூறி நடித்துள்ளது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிப்காட் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88