ஓர் இளம்பெண் தனது காதலனுடன் புறப்படுவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுப் புறப்படுகிறாள். அவளது காதலன் உல்ப் (வெற்றி) அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு இரவு முழுக்க அதே ஊரில் மர்மமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் மற்றொரு ரவுடி சைலண்ட் (முருகன்) தனது தங்கையைக் காணவில்லை என அதே ஊர் முழுக்க சல்லடையிட்டு அலைகிறான். இந்த இரண்டு கதைச் சுருக்கத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளவே எக்கச்சக்க பொறுமை தேவைப்படுகிறது. இதற்குப் பின் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சோதனை முயற்சியே `பகலறியான்’ படத்தின் கதை.
வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்துவரும் வெற்றியின் அடுத்த முயற்சி இது. படம் முழுக்க உம்மென்று இருக்கும் அவரின் கதாபாத்திரம் பலவித குழப்பங்களை வரவைக்கிறது, சில இடங்களில் சோதிக்கவும் செய்கிறது. அறிமுக நடிகராகப் படத்தின் இயக்குநர் முருகன் ‘சைலண்ட்’டாக வருகிறார். நடிப்பில் இன்னும் நிறைய நிறையப் பயிற்சி வேண்டும். அதிலும் க்ளைமாக்ஸில் சைகை மொழியில் பேசும் உருக்கமான காட்சி என்று வைக்கப்பட்டவை எல்லாம் எந்த உணர்வையும் ஏற்படுத்தாமல் சாதாரண காட்சியாகவே முடிகிறது. இந்தப் படத்தில் தனக்கான வேலையை ஓரளவுக்கு நன்றாகச் செய்து பாஸ் மதிப்பெண் வாங்குகிறார் நாயகி அக்ஷயா கந்த அமுதன். நகைச்சுவை நடிகரான சாப்ளின் பாலுவுக்கு இதில் குணச்சித்திர கதாபாத்திரம். அவரது நடிப்பில் குறையேதுமில்லை.
இரவு நேர ஒளியுணர்வையும், ட்ரோன் ஷாட்களையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது அபிலாஷ் பி.எம்.ஓய்-யின் ஒளிப்பதிவு. காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக கோர்வையில்லாமல் கத்திரி போட்டிருக்கும் குரு பிரதீப்பின் படத்தொகுப்பு திரைக்கதையை மேலும் குழப்பமாக்குகிறது. விவேக் சரோவின் பின்னணி இசை சற்று கவனம் ஈர்த்தாலும், அதற்கான வலுவான காட்சிகள் இல்லாததால் வீணடிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. கலை இயக்குநரும் தன் பங்குக்குப் பட்டாம்பூச்சி, ஓநாய், ‘வைதேகி காத்திருந்தாள்’ சுவரொட்டி எனக் குறியீடுகளை அடுக்கியிருக்கிறார். ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை என்று கையை விரிக்கின்றன காட்சிகள்.
தலை முடியை கட்டிங் பிளையர் வைத்துப் பிடுங்குவது, பல்லைப் பிடுங்குவது என அருவருப்பாகக் கொடுமைகள் செய்வதென ஆரம்பிக்கும் தொடக்கமே நம்மை முகம் சுளிக்கவைக்கிறது. எந்தக் கதாபாத்திரத்துக்கும் எந்தவித அறிமுகமும் இல்லாமல், அந்தரத்தில் பறக்கவிட்டது போல நகரும் திரைக்கதை நாமே பல யூகங்களைச் செய்துகொள்ளச் சொல்கிறது. இது கதை ஆரம்பித்த 30 நிமிடங்களில் அயற்சியைத் தந்து, காணாமல் போனது வில்லனின் தங்கை மட்டுமல்ல நமது நேரமும்தான் என்ற முன்முடிவுக்கு வரவைக்கிறது. இன்ஸ்பெக்ட்ராக சாய் தீனா மற்றும் அவரது போலீஸ் கேங் செய்யும் எரிச்சல் வர வைக்கும் கோமாளித்தனங்கள் நம் முன்முடிவுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. எரிகிற நெருப்பில் எண்ணெய்யாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வந்து மேலும் வறுத்தெடுக்கிறார்கள்.
ஹைப்பர்லிங்க் பாணியிலான கதையை எழுதியுள்ள இயக்குநர் முருகன், அதை நோக்கி நகர்வதற்காகவே மொத்த திரைக்கதையையும் வலுக்கட்டாயமாக வடிவமைத்துள்ளார். அது கதாபாத்திரங்களைப் பற்றிய எந்தத் தெளிவையும் சரியாகத் தராமல், எந்தவித சுவாரஸ்யமான உணர்வையும் ஏற்படுத்தாமல் குழப்பத்தையே பிரதான உணர்வாக விட்டுச் செல்கிறது. இந்த உணர்வோடு சிரிப்பே வராத அபத்த நகைச்சுவைகள், தேவையில்லாத கடத்தல் காட்சிகள், எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் என இருளில் நகரும் மொத்த படமும் கடைசி வரையில் வெளிச்சத்துக்கே வரவில்லை.
ஒட்டுமொத்தமாக இந்த `பகலறியான்’ மோசமான நடிப்பு, குழப்பமான திரைக்கதை என அந்த இரவில் அவன் தூங்கியே இருக்கலாம் என்ற உணர்வை விட்டுச் செல்கிறான்.