பிரதமர் மோடி கடந்த ஆண்டு கர்நாடகாவில் புலிகள் காப்பகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிக்கு வந்து சென்றபோது, நட்சத்திர ஹோட்டலில் தங்கியதற்கான பில் (Bill) ரூ.80 லட்சத்தை ஓராண்டாகியும் அரசு தரப்பிலிருந்து செலுத்தாததால், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
முன்னதாக, கர்நாடகாவில் 1973-ல் தொடங்கப்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டுவிழா தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA), சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) சார்பாக கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஏப்ரல் 9 – 11 வரையில் ரூ. 3 கோடி செலவில் முடிக்குமாறும், அந்த செலவுக்கான தொகையை மத்திய அரசு வழங்கும் என்றும் மாநில வனத்துறைக்கு உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த மோடி, மைசூருவிலுள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா (Radisson Blu Plaza) நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, பின்னர் அங்கிருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பிறகு செலவானது திட்டமிடப்பட்ட தொகையைத் தாண்டி மொத்தமாக ரூ.6.33 கோடியில் வந்து நின்றது.
மத்திய அரசு தருவதாகக் கூறிய ரூ.3 கோடி மட்டும் மாநில அரசுக்கு தரப்பட்டிருக்கிறது. மீதம், ரூ.3.33 கோடி கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதில், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான பில் மட்டும் ரூ.80.6 லட்சம். இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி NTCA துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரலுக்கு கர்நாடக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், நிலுவைத் தொகை ரூ.3.33 கோடியை நினைவூட்டி கடிதம் எழுதினார். ஆனால், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான செலவை மாநில அரசுதான் செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கர்நாடக அரசுக்கு NTCA பதில் கடிதம் எழுதியது.

அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 22-ம் தேதி கர்நாடகாவின் தற்போதைய முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சுபாஷ் கே.மல்கேடே, ரேடிசன் ப்ளூ பிளாசாவில் செலுத்த வேண்டிய தொகையையும் சேர்த்து நிலுவையிலிருக்கும் ரூ.3.33 கோடியையும் செலுத்துமாறு NTCA-க்கு கடிதம் எழுதினார். இருப்பினும், இதுவரையிலும் இதற்கு எந்தப் பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலின் நிதிப் பிரிவு பொது மேலாளர், தங்கள் ஹோட்டலின் சேவைகளை பயன்படுத்தியதற்கான செலவுத் தொகை ரூ.80.6 லட்சத்தை ஓராண்டாகியும் செலுத்தவில்லை என வனத்துறை துணைப் பாதுகாவலர் பசவராஜுக்கு மே 21-ம் தேதி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், `ஓராண்டாகியும் ரூ.80.6 லட்சம் செலுத்தாததால் 12 சதவிகித வட்டித்தொகை ரூ.12.09 லட்சத்தையும் சேர்த்து மொத்தமாக செலுத்தவேண்டும். ஜூன் 1-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், `மத்திய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால், மாநில அரசு பணம் கட்ட மறுப்பதாக’ பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88