ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கும் பயிர்களுக்கும் இயற்கை விவசாய முறையில் வளர்க்கும் பயிர்களுக்கும் மரபணு ரீதியாக வித்தியாசம் இருப்பதை நீண்ட ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு கண்டறிந்துள்ளது ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழகம் (University of Bonn).
ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வயல்களில் பார்லி பயிர்களை நட்டு, ஒன்றில் ரசாயன விவசாய முறைகளையும் மற்றொன்றில் இயற்கை விவசாய முறைகளையும் பயன்படுத்தினர். 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பார்லி செடிகள் மரபணு ரீதியாக செறிவூட்டப்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் எந்தளவுக்கு முக்கியம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தும் வகையில் இதன் முடிவுகள், “நிலையான வளர்ச்சிக்கான வேளாண்மை இதழில்” (Journal for Agronomy for Sustainable Development) வெளியிட்டுள்ளனர்.
1990-களில் பேராசிரியர் டாக்டர். ஜென்ஸ் லியோன், பான் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் இந்த ஆராய்ச்சி எடுக்கும் என்பது தெரிந்தும், தனது குழுவுடன் வெவ்வேறு விவசாய நிலைமைகள் தாவரங்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்விற்காக பயிர் அறிவியல் மற்றும் வள பாதுகாப்பு நிறுவனத்தில் (INRES) 23 ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டனர்.
இதுகுறித்து டாக்டர் லியோன் தெரிவித்துள்ளதாவது, “மரபணு மாறுபாட்டை அதிகரிக்க, அதிக மகசூல் தரும் பார்லியை எடுத்துக்கொண்டோம். இவை இரண்டையும் பக்கத்து பக்கத்து வயல்களில் பயிரிட்டோம். இதனால் பார்லி ஒரே வகையான மண்ணிலும், ஒரேவிதமான தட்பவெப்ப நிலையிலும் வளர்ந்தது. இரண்டுக்கும் விவசாய முறை மட்டுமே வித்தியாசமாக இருந்தது. ஒன்றில் பூச்சிகளை எதிர்த்துப் போராட பூச்சிக்கொல்லிகளையும், களைகளை அகற்ற களைக் கொல்லிகளையும், ஊட்டச்சத்திற்காக ரசாயன உரங்களும் பயன்படுத்தப்பட்டன.
மற்றொரு வயலில் களைகளை அகற்ற இயந்திரங்கள் மற்றும் ஊட்டச்சத்திற்காக இயற்கை உரங்கள், தொழுவுரம் மற்றும் இலை தழைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன” என்கிறார்.
மேலும் டாக்டர் லியோன் பேசும்போது, “முதல் 12 ஆண்டுகளில் இரண்டு வயல்களிலும் பயிரிடப்பட்ட பார்லியில் ஒரே மாதிரியான மாற்றங்களே இருந்தன. அடுத்தடுத்த ஆண்டுகளில், இயற்கை விவசாய முறையில் வளர்ந்த பார்லி பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, நீர் பற்றாக்குறைக்கு எதிரான மரபணு மாறுபாடுகளைக் கொண்டிருந்தது. அதேபோல வேர்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதற்கு ஒரு காரணம் இயற்கை விவசாயத்தில் வேளாண்மையில் ஊட்டச்சத்துக்கள் வலுவாக கிடைப்பதாக கூட இருக்கலாம்” என்கிறார்.
மேலும் அவர், “வழக்கமாக வளர்க்கப்படும் பார்லியும் காலப்போக்கில் மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக மாறியது. அதாவது பார்லியில் உள்ள மரபணுக்கள் மேலும் மேலும் ஒரே மாதிரி மாறியது. ஆனால், இயற்கை வேளாண்மையில் விளைந்த பார்லி மிகவும் பன்முகத்தன்மையுடன் இருந்தது.
இயற்கை விவசாயத்தில், மரப்பணுக்கள் பரவலாக வேறுபடுகின்றன. வழக்கமான செயற்கை முறை விவசாயத்தைக் காட்டிலும் இயற்கை விவசாயத்தில் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கமாக இருந்தது.
சுற்றுச்சூழலின் மாறுபாடு தாவரங்களில் மரபணு பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, தாவரங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இயற்கை வேளாண்மைக்கு உகந்த ரகங்களை பயிரிடுவதன் முக்கியத்துவத்தை முடிவுகள் நிரூபிக்கின்றன.
தாவரங்களின் மரபணு அமைப்பு இந்த நிலைமைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதால், மிகவும் வலுவாகவும் அதிக மகசூலையும் அளிக்கும். பாரம்பர்ய அல்லது வனங்களில் உள்ள தாவரங்களோடு இனக்கலப்பு செய்து வளர்த்தால் இன்னும் லாபகரமாக இருக்கும்” என்கிறார்.