ஆர்சிபி அணி 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லாததற்கான முக்கிய காரணத்தை அம்பத்தி ராயுடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த அணியில் உண்மையிலேயே எத்தனை பல நல்ல பிளேயர்கள் இருந்ததார்கள், பின்னர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை அந்த அணி நிர்வாகம் பார்க்க வேண்டும் என சுருக்கென தனக்கே உரிய பாணியில் காரசாரமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு கிரிக்கெட் வட்டாரத்திலும், ஆர்சிபி அணியின் வட்டாரத்திலும் வெந்த புண்ணில் வேல் ஒன்றை பாய்ச்சியதுபோல் இறங்கியுள்ளது. இந்த பதிவின் பின்னணியில் விராட் கோலியை சூசகமாக அம்பத்தி ராயுடு சாடியிருக்கிறார். அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே 2019 ஆம் ஆண்டில் இருந்து இருக்கும் மனக்கசப்பு தான் காரணம். அதனால், தன்னுடைய ஆதங்கத்தை ராயுடு சரியான நேரத்தில் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் சாம்பியன் பட்டம் என்பது இன்று வரை கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. 17 ஆண்டுகால கோப்பைக்கான தாகம் இந்த ஆண்டும் தணியவில்லை. வெறும் கையுடனேயே ஆர்சிபி அணி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 முதல்பாதி ஆட்டத்தைப் பார்த்தால், ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறும் நிலையிலேயே இருந்தது. ஆனால், வரிசையாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். அந்த கம்பேக் பிளே ஆஃப் சுற்றிலும் தொடரும் என எதிர்பார்த்தபோது, ராஜஸ்தான் அணியிடம் பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அம்பத்தி ராயுடு, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லீக் சுற்றில் வீழ்த்தியதையே ஆர்சிபி அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றதுபோல் கொண்டாடி தீர்த்தனர். இதனால், சிஎஸ்கே அணி வென்ற 5 சாம்பியன் கோப்பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டார்களா என்ன?, ஆனால் ஆர்சிபி கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது அப்படி தான் சிறு பிள்ளை தனமாக இருக்கிறது. ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என்பதை அவர்கள் குறிகோளாக கொள்ளவில்லை, சிஎஸ்கே அணியை வீழ்த்தினாலே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனநிலையில் இருந்து அவர்கள் மாற வேண்டும்” என தொலைக்காட்சி கமெண்டரியில் கூறினார்.
கவாஸ்கருடன் பேசும்போது, அவர் ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி என ஆர்சிபி அணியை தேர்ந்தெடுத்தார். அதற்கு பதில் கொடுத்த அம்பத்தி ராயுடு, “சார் உங்கள் கணிப்பு தவறாக இருக்கும், என்னை பொறுத்தவரையில் சன்ரைசர்ஸ் அணி தான் ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வெல்லும், இம்முறை ஆந்திராவுக்கு தான் ஐபிஎல் சாம்பியன் கோப்பை வரும்” என்று தெரிவித்தார். பின்னர் இது குறித்து எக்ஸ் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவில், ” இத்தனை ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக உண்மையாக சப்போர்ட் செய்யும் ரசிகர்களை நானும் ஆதரிக்கிறேன்.
May 24, 2024
ஆனால், ஆர்சிபி நிர்வாகமும், அந்த அணிக்கு கேப்டன்களாக இருந்தவர்களும் தனிப்பட்ட வீரர்களின் நலனுக்காக விளையாடாமல், அணியின் நலனை முன்னிலைப்படுத்தி இருந்தால் ஆர்சிபி அணி பல ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்றிருக்கும். அந்த அணியில் எத்தனை நல்ல பிளேயர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால் ஆர்சிபி ரசிகர்கள், அந்த அணிக்கு அணியின் நலனை முன்னிலைப்படுத்தும் வீர்களை கொண்டு வருமாறு அழுத்தம் கொடுங்கள். அடுத்த ஆண்டாவது புதிய சகாப்தம் ஆர்சிபி அணிக்கு தொடங்கட்டும்” என கூறியுள்ளார்.
அவரின் விமர்சனம் விராட் கோலியை சூசகமாக குறிப்பிடும் வகையிலேயே இருக்கிறது. விராட் கோலி தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதையே அவர் இந்த பதிவில் தெரிவித்திருப்பதாக ரசிகர்கள் கூறியிருப்பதுடன், 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை எடுக்காமல் விஜய் சங்கரை விராட் கோலி தேர்வு செய்ததால் அந்த கோபத்தில் இருக்கும் ராயுடு இப்போது சமயம் பார்த்து விராட் கோலி மீதான பகையை தீர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.