BCCI: `இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியா?' – தெறித்து ஓடும் ஜாம்பவான்கள்; காரணம் என்ன?

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதம் ஆகிறது. வரும் 27-ம் தேதியோடு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் முடிகிறது. இதற்கிடையில், பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவது குறித்த தங்களின் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

BCCI

சொல்லி வைத்தாற்போல எல்லாருமே இந்தப் பதவியின் மீது விருப்பம் காட்டாதவாறே பேசியிருக்கின்றனர். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளுள் இந்தியாவும் ஒன்று. உலகின் செல்வாக்குமிக்க கிரிக்கெட் போர்டுகளில் தலையாயது பிசிசிஐ. அப்படியிருந்தும் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகத் தயக்கம் காட்டுவது ஏன்?

முதலில் யார் யாரெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி குறித்துப் பேசியிருக்கிறார்கள் எனப் பார்த்துவிடுவோம். சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் இயக்குநரும் இலங்கையின் முன்னாள் வீரருமான சங்ககரா பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது அவரிடம் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

சங்ககரா

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக யாரும் என்னை அணுகவில்லை. அப்படியொரு பணியில் முழுமையாக ஈடுபடும் அளவுக்கு எனக்கு நேரமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் வகிக்கும் பதவியையே நல்லபடியாகத் தொடர விரும்புகிறேன்” எனச் சிரித்துக் கொண்டே கூறினார்.

முதல் முதலாக இந்த விஷயத்தில் அடிப்பட்ட பெயர் ஸ்டீபன் ப்ளெம்மிங்தான். சென்னை அணியின் பயிற்சியாளராக 16 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். தோனிக்கு நெருக்கமானவர். நியூசிலாந்து அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர். இவர் பயிற்சியாளர் ஆக வந்தால் நன்றாக இருக்கும் என பிசிசிஐ விருப்பப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், சமீபத்தில் சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கொடுத்த பேட்டியில் இதைப் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார்.

ஸ்டீபன் ப்ளெம்மிங்

அவர் பேசியதாவது, “ஸ்டீபன் ப்ளெம்மிங் இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்பிருக்கிறது எனும் செய்தி வெளியானவுடன் பத்திரிகையாளர்களிடமிருந்து நிறைய அழைப்புகள் வந்தன. நான் ஸ்டீபன் ப்ளெம்மிங்கிடம், `நீங்கள் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு `நான் விண்ணப்பிக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா?’ எனக் கேட்டுவிட்டு ப்ளெம்மிங் சிரித்தார். ப்ளெம்மிங்கை பற்றி எனக்குத் தெரிந்த வகையில் அவர் நீண்ட நெடிய பெரிய கமிட்மென்ட்களையெல்லாம் அவர் எடுத்துக்கொள்ளமாட்டார்’ எனக் கூறியிருந்தார். ஆக, ப்ளெம்மிங்கும் சந்தேகம்தான்.

குடும்பத்தை காரணம் காட்டி ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கும் தப்பிவிட்டார். “ஒரு தேசிய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால், என் வாழ்வின் முக்கியமான விஷயங்கள் சிலவற்றிலும் நான் கவனம் செலுத்த வேண்டும். அதில் எனது குடும்பமும் அடக்கம்.

ரிக்கி பாண்டிங்

இந்திய அணிக்கு பயிற்சியாளரானால் ஐ.பி.எல் அணியில் பணியாற்ற முடியாது. மேலும் இந்திய அணிக்காக வருடத்தில் 11 மாதங்கள் செலவழிக்க வேண்டி வரும். அது என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு செட் ஆகாது” எனக் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும்பட்சத்தில் நிறைய அரசியலைச் சமாளிக்க வேண்டி வருமாமே என இப்போதே சுதாரித்துவிட்டார் ஜஸ்டின் லாங்கர். “`ஒரு ஐ.பி.எல் அணியில் இருப்பதை விட ஆயிரம் மடங்கு அரசியலையும் அழுத்தத்தையும் நீங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக சந்திக்கக்கூடும்’ என கே.எல்.ராகுல் கூறினார். அது நல்ல அறிவுரையாகத் தெரிந்தது. இப்போது எனக்கு அந்த பணி செட் ஆகாது” என நழுவிவிட்டார்.

ஜஸ்டின் லாங்கர், பேட் கம்மின்ஸ்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை பற்றி பேச்சு எழுந்த சமயத்திலிருந்து இப்போது வரைக்குமே பெரிதாக எந்த முன்னாள் வீரருமே அந்தப் பதவியின் மீது ஆர்வத்தை காட்டவில்லை. இதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. ரிக்கி பாண்டிங் வெளிப்படையாகச் சொன்னதைப் போல, இந்திய அணியின் பயிற்சியாளராகும்பட்சத்தில் ஐ.பி.எல் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற முடியாது. பிசிசிஐ-தான் இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் குழுவில் டேனியல் வெட்டோரியும் ஒருவர். ஆனால், அவர் இப்போது சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இது சாத்தியம். இந்தியாவில் அது சாத்தியமில்லை.

இந்திய அணியின் தொடர்பிலிருந்த காலத்தில் ராகுல் டிராவிட் ஐ.பி.எல் அணிகளுடன் தொடர்பிலேயே இல்லை. மேலும், இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதை விட ஐ.பி.எல் அணியின் பயிற்சியாளராக இருப்பது எளிது. வருடத்தில் மூன்று மாதங்கள்தான் முழுமையான பணி இருக்கும். பணபலனும் அதிகமாக இருக்கும். சுமையும் பொறுப்பும் குறைவு. அவர்கள் நினைத்தால் ஐ.பி.எல் இல்லாத சமயங்களில் வேறு லீக்குகளுக்கு கூட சென்று வர முடியும். இதெல்லாம் பெரிய சௌகரியம்.

மேலும், ஜஸ்டின் லாங்கர் சொல்வதைப் போல நிறைய அழுத்தங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவில் கிரிக்கெட்டர்கள் சூப்பர் ஸ்டார்கள். அவர்களைத் திரை நட்சத்திரங்கள் போல மனது நோகாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் வீரர்களை ஆதிக்கத்தோடு கட்டுப்படுத்துவது போல இங்கே செய்ய முடியாது. இங்கே டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களின் கைதான் ஓங்கி இருக்கும். பிசிசிஐயும் என்ன மாதிரியான அழுத்தங்களை கொடுக்கும் எனத் தெரியாது.

Team India

இந்த மாதிரியான விஷயங்கள்தான் வெளிநாட்டு ஜாம்பவான்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பதற்கு ஒருவித தயக்கத்தைக் கொடுக்கிறது. பிசிசிஐ இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.