ஒரு காதல் தோல்விக்குப் பின் எதன் மீதும் பிடிப்பில்லாமல் இருந்தான் அஜய். பூஜாவுடன் இருந்த 6 ஆண்டுக்கால காதலுக்கு குட்பை சொன்ன பிறகு, மதுவோடும் புகையோடும் குடித்தனம் நடத்தத் தொடங்கியிருந்தான்.
பூஜாவுடன் இருந்த காலங்களை அவனால் மறக்க முடியவில்லை என்பது உண்மையென்றாலும், மறப்பதற்காகவே என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறான். ஊர், வேலை, லைஃப்ஸ்டைல் என ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டு வந்துவிட்ட பின்னும் ஏதோவொரு மூலையில் பூஜாவின் நினைவுகள் அவனை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தன.
காதலித்த காலத்தில் பூஜாவை தவிர வேறு எந்தவொரு பெண்ணையும் நினைத்துக்கூடப் பார்க்காமல் இருந்தான். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். கையில் மது, கட்டிலில் தினமொரு மாது என முற்றிலுமாக மாறிக் கிடக்கிறான்.
“இந்த லவ்வு கிவ்வு எல்லாம் நமக்கு செட் ஆகாதுடா. அவளை விழுந்து விழுந்து லவ் பண்ணேன். கடைசில எவன் கூடவோ போய் செட்டில் ஆகிட்டா. இவ்ளோ வருஷம் ஆச்சு மச்சான். மறக்க முடியல. அதுக்குனு அப்டியே தேவதாஸ் மாதிரி ஃபீலிங்ல சுத்துவேன்னு நினைச்சிட்டா போல. அவளைவிட சந்தோஷமா வாழ்வேன். அவளுக்குக் கொடுத்ததைவிட ஆயிரம் மடங்கு சந்தோஷத்தை மத்த பொண்ணுங்களுக்குக் கொட்டிக் கொடுப்பேன் மச்சான்… நான் சொல்றது ரைட் தானே?’’
முழு போதையில் இருக்கும் நேரங்களிலெல்லாம் அஜய் தன் நண்பர்களிடம் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறான்.
“ஒரு பொண்ணை லவ் பண்றோம்… அவதான் நம்ம வாழ்க்கை, காலம் முழுக்க நம்ம கூட வரப்போறான்னு மிதப்புல திரியுறோம். ஏதோ ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல… ஆறு வருஷத்துக்கப்புறம் குட்பை சொல்லப் போறானு கனவுல கூட நினைச்சிப் பாத்திருக்க மாட்டோம்… ஆனா திடீர்னு ஒருநாள் அப்டி சொல்லிட்டு மொத்தமா நம்ம உலகத்தைவிட்டே காணாம போயிடுவாங்க.
அப்பதான் தோணும் … இதுவரைக்கும் செலவு பண்ண டைம் வேஸ்ட்டு, செலவு பண்ண பணம்லாம் வேஸ்ட்டு, அட இதெல்லாம் கூட விடு… எமோஷனலா அடிக்ட் ஆகி அவமேல வச்ச அன்பு, பாசம், காதல் எல்லாம் வேஸ்ட்டு…
அதவிட முக்கியம்… அந்த கனெக்ட்ல இருந்து மீண்டு வர முடியாம அனுபவிக்கிற வலி இருக்கே… அதெல்லாம் நரக வேதனை. உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாது. லவ் ப்ரேக் அப் ஆனா தான் இதெல்லாம் புரியும்.’’
இன்னொரு காதல் அல்லது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி யார் அறிவுறுத்தினாலும் அஜய் அவர்களிடம் நீண்டதொரு பாடத்தை எடுக்கத் தவறுவதில்லை.
பூஜாவுடன் காதல் முறிந்தபிறகு அஜய் தன் பெண் தோழிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே இருந்தான்.
“எனக்கு இந்த லவ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல. ஒன் நைட் ஸ்டாண்டு ஓகே. அதுவே ரொம்பப் பிடிச்சுப் போச்சுனா ஃப்ரெண்ட் வித் பெனிஃபிட்ஸ்னு இருந்துக்கலாம். ஒரு பழைய டயலாக் சொல்றேன் . ஒரு கப் காபிக்காக ஒரு காபித் தோட்டத்தையே விலைக்கு வாங்க முடியாது. இந்த நாள் மட்டும்தான் நிச்சயம். செமையா என்ஜாய் பண்ணோமா… ஒரு ஹக், ஒரு ஹாண்ட் ஷேக்னு அவங்க அவங்க வேலையைப் பாக்கப் போனோமானு இருந்துட்டா ஒரு பிரச்னையும் இல்லை. அதவிட்டுட்டு எமோஷனலி அட்டாச் ஆகி அய்யோ, அம்மா வலிக்குதுனு திரும்பத் திரும்ப அழறதுக்கு நான் ரெடியில்லை. நான் சொல்றது கரெக்ட் தானே?’’ – அஜய் அன்றிரவு தன்னுடன் படுக்கையை பகிர வந்த புதிய தோழியிடம் தன் வழக்கமான பாணியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.
மொட்டைமாடி பப்பில் எதிரெதிரே அமர்ந்தபடி அஜய் தன் தோழியுடன் உட்கார்ந்திருந்தான்.
`சியர்ஸ்’ என்று சொல்லிவிட்டு தோழியின் மதுக் கோப்பையைத் தன் கோப்பையால் லேசாக முட்டிவிட்டு ஒரு போதைக்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.
வெளிர் எலுமிச்சை நிறத்தில் மார்பு வரை மூடியிருந்த ஆடையில் இருந்தாள் அவள். க்ளீவேஜில் அழகிய டாட்டூ ஒன்றைக் குத்தியிருந்தாள். அடிக்கடி மார்பின் நடுவில் வந்து குவியும் தன் விரிந்த கூந்தலைச் சரிசெய்துகொண்டே இருந்தாள். அவள் தன் மதுக்கோப்பையை உதடுகள் வைத்து உறிஞ்சிப் பருகியபோது சிந்திய சில மதுத் துளிகள் நேராக அவள் க்ளீவேஜில் வழிந்து உள்ளிறங்கியது.
“ஐ வான்ட் டூ ஷேர் யுவர் ட்ரிங்க்’’ என்றான் அஜய்.
தன் கையிலிருந்த மதுக்கோப்பையை அவன் முன்பாக நீட்டினாள்.
“எனக்கு இது வேணாம். அதான் வேணும்’’ – தன் கண்கள் இரண்டையும் அவள் க்ளீவேஜில் சிந்திய துளிகளின் மீது குவித்தான்.
இருவரும் மிதமான போதையில் இருந்த நேரம்.
“யெஸ் ப்ளீஸ் அஜய் ‘’ என்றாள்.
அன்றிரவு முழுக்க அஜய் தன் தோழியோடு அத்தனை மகிழ்வாய் இருந்தான். விடிந்ததும் எந்த ஒட்டுமில்லாமல், உறவுமில்லாமல், துளி காதல் கூட இல்லாமல் பிரிந்து போகக் கூடிய அவளை இந்த இரவு முழுக்க இப்படி கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி எந்தவித சிந்தனையும் அப்போது அவனுக்கில்லை.
இந்த நொடி… இந்த அணைப்பு… இந்த இன்பம்… இவை மட்டுமே நிஜம். இவை மட்டுமே போதுமென்று உள்ளுக்குள் தீயை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தான். வெறி கொண்ட சிங்கம் வேட்டையாடுவது போல் தன் கலவிப் பசியை கடுகளவும் மிச்சம் வைக்காமல் தின்று தீர்த்து முடித்திருந்தான்.
“அஜய்… உன் கூட ஃப்ரெண்ட் வித் பெனிஃபிட்ஸ் ரிலேஷன்ஷிப்லதான் ட்ராவல் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா, உன்னோட பெர்ஃபாமென்ஸுக்கு முன்னாடி நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறேன்டா.
என்னோட எக்ஸ், உன்னோட எக்ஸ் ரெண்டு பேருமே நம்மளை சீட் பண்ணிட்டாங்க. நம்ம ஏன் ஒரு புது லைஃப் ஸ்டார்ட் பண்ணக் கூடாது?’’ – கலவி முடிந்த வேளையில் அஜய்யிடம் இப்படிச் சொன்னதும் அவன் தன் தோழியைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தான்.
“என்னோட எக்ஸ் முன்னாடி நீயெல்லாம் ஒண்ணுமேயில்லை. அவளைவிட ஒரு பெட்டர் பார்ட்னரை நான் மீட் பண்ணவே இல்ல. நான் ஒரு நல்ல பார்ட்னர்னு உனக்கு எப்டி ஃபீல் ஆச்சோ, அதே மாதிரி நீ அவளைவிட பெட்டர் பார்ட்னர்னு எனக்கு ஃபீல் ஆகியிருக்கணும். உன்கிட்ட அப்டி எதுவும் தோணலை. ஸாரிடி’’ என்றான்.
அஜய் அப்படிச் சொன்னதும், அவன் தோழிக்கு சுர்ரென்று கோபம் வந்தது. தன் கலைந்த கூந்தலை வாரிச் சேர்த்துக் கட்டிக் கொண்டாள். அறையின் எங்கோவொரு மூலையில் சிதறிக் கிடந்த ஆடைகளையெல்லாம் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். அஜய்யிடம் எதுவும் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் கிளம்பிச் சென்றது குறித்து எந்தவிதக் குற்றவுணர்வுமில்லாமல் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான் அஜய். தன்னை விரும்புவதாகச் சொன்ன அந்தப் பெண் அன்றைய இரவு முழுக்க தன்னை எப்படியெல்லாம் மகிழ்வித்தாள் என்பதை நிதானமாக யோசித்தான். கலவி விஷயத்தில் அவனுடைய எக்ஸ், இவளருகே கூட நிற்கக் கூட முடியாது. அந்தளவுக்கு பேரின்பத்தைக் கொட்டிக் கொடுத்த வித்தைக்காரி இவள்.
ஆனாலும், வேண்டுமென்றே பொய் சொல்லித்தான் அவளை இந்த அறையைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறான். அவள் எவ்வளவு பெரிய வித்தைக்காரியாக இருந்தாலும், பூஜா கொடுத்த வலிதான் அவனுக்குத் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நிற்கிறது. ஒரு பெரிய வலியை எதிர்கொள்வதைவிட இந்தச் சிறிய வலியைத் தாங்கிக்கொள்வது மேல் என நினைத்துக் கொண்டே சிகெரெட்டை அணைத்தான்.
“என்ன வேணும்னாலும் சொல்லுடா… இப்டியே வாழ்க்கை முழுசா இருந்துட முடியாது. கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகுற வழியைப் பாரு. எவ்ளோ நாளைக்குத்தான் இந்த பெனிஃபிட்ஸ் கான்செப்ட்ல பொண்ணுங்க உனக்கு கிடைச்சிட்டே இருப்பாங்க. உன்கிட்ட பணமும், இளமையும் இருக்குற வரைக்கும் தான் இந்த கான்செப்ட்லாம் ஜாலியா இருக்கும். அப்றம் நீ மட்டும் தான் தனியா நிக்கணும். யோசிச்சி பாத்துட்டு முடிவெடு.
சிவா அங்கிளோட பொண்ணு தீபிகா இருக்கால்ல, அவளுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்காம். நீ ஓகேன்னு சொன்னா கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சிடலாம்… என்ன சொல்றே?’’ – அஜய்யின் அக்கா அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருந்தாள்.
பூஜா பிரிந்து சென்ற இந்த 2 வருடங்களில், இதுவரை 99 முறை செக்ஸை கடந்துவிட்டான் அஜய். தன்னுடன் இதுவரை உடலைப் பகிர்ந்துகொண்ட பெண்ணுகளுடன் ஒருமுறையிலிருந்து அதிகபட்சமாக 25 முறைகூட தொடர்பிலிருந்திருக்கிறான். அது அவனுக்குக் கம்பெனி கொடுக்கும் பெண்ணின் சூழல், ஒருமித்த கருத்து இப்படி பல காரணங்களை வைத்து மாறுபட்டிருக்கின்றன. என்ன சூழல் இருந்தாலும் காதல், திருமணம் என அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறான் அஜய்.
“அவனவன் பிரேக் அப்புக்கு பிறகு தாடி வளர்ப்பான், நாய் வளர்ப்பான், சரக்கு , தம்முனு கூட நாசமா போவான். அவ்ளோ ஏன்… ஒரு பிரேக் அப் முடிஞ்ச கையோட இன்னொரு லவ்வு, கல்யாணம்னு கூட செட்டில் ஆகி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இந்த உலகத்துலேயே பிரேக் அப்புக்குப் பிறகு எத்தனை முறை பண்ணோம்னு விரல்விட்டு எண்ணிக்கிட்டு இருக்குற ஒரு லூஸை இப்பத்தான்டா பாக்குறேன் ’’
– அஜய்யின் நண்பன் அவனை பங்கமாகக் கலாய்த்த பிறகும் அஜய் தன் 100 -வது செக்ஸ் தினத்தைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தான்.
அன்றிரவு அஜய் தன் புதிய தோழிக்கு அழைப்பு விடுத்துவிட்டு பைக்கில் கிளம்பினான்.
இடியும் மின்னலுமாக வெளுத்து நின்றது வானம்.ஹெல்மெட் எங்கும் வழிந்த நீரில் சாலையை மிகச்சரியாக கணிக்க முடியாமல் வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் வந்த இன்னொரு பைக் அஜய்யின் பைக் மீது மோதவும் தலைகுப்புற கீழே விழுந்து சரிந்தான். சரியான நேரத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானவர்களை உடனடியாகத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தது. பெரிய காயங்கள் இல்லையென்றாலும் அஜய் முற்றிலும் குணமாக 15 நாள்கள் ஆகலாம் என அறிவுறுத்திவிட்டுச் சென்றார் மருத்துவர்.
தன் பக்கத்து படுக்கையில் இருந்தவர்களை கவனித்துக் கொள்ள வந்த உறவினர்களைப் பார்க்கும்போது அஜய்க்கு என்னவோ போலிருந்தது.
அஜய் வேலை நிமித்தமாக வெளியூரில் இருப்பதால் அவன் பெற்றோரோ உறவினர்களோ உடனடியாக அங்கு வர முடியாது. அஜய் மெதுவாக தன் கைப்பேசியை எடுத்து, தனக்கு விபத்து நடந்த விஷயத்தை தன் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் குறுஞ்செய்தியாகப் பகிர்ந்தான். `டேக் கேர் ‘ மெசெஜ்கள் ரிப்ளையாக வந்து குவிந்தன. சிலர் உடனடியாக போனில் அழைத்து நடந்ததை விசாரிக்கிறார்கள். நேரில் வந்த நண்பர்கள் சிலர் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டுப் போகிறார்கள். அங்கு வந்த பெண் தோழிகள் எல்லாம் ஒரு பொக்கே அல்லது பழங்களோடு வந்து ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போயிருந்தார்கள்.
அஜய்க்கு திடீரென பூஜாவின் ஞாபகம் வந்துபோகிறது. முன்பு ஒருமுறை காய்ச்சலோடு இருந்தபோது பூஜா அவனை மார்ப்போடு சேர்த்து அணைத்துக்கொண்ட காலங்களை நினைத்து அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
ஒரு காதலை மறக்க முடியாமல் அதை மறப்பதற்காக அஜய் தேர்ந்தெடுத்த வழிதான்… இந்த ’ஃப்ரெண்ட் வித் பெனிஃபிட்ஸ்’. என்றாலும், உள்ளுக்குள் அவனுக்கும் ஓர் அழுத்தமான காதல் தேவைப்படுகிறது. இன்னொரு பிரேக் அப் வலியை தாங்க முடியாது என்பதுதான் அவனை மடைமாற்றுகிறதே தவிர, அஜய் சராசரி காதலனாய் இருக்கவே உள்ளூர விரும்பிக் கொண்டிருக்கிறான்.
அஜய் தன்னுடன் முழு சம்மதத்துடன் `ஃபெரண்ட் வித் பெனிஃபிட்ஸ்’ உறவில் இருந்த தோழிகளை என்ஜாய் செய்திருந்தாலும், தன்னை அன்போடு ஆயுளுக்கும் நேசிக்கிற ஓர் அழுத்தமான காதலை அவன் உள்மனம் எதிர்ப்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதை அவனால் மறுக்கவும் முடியவில்லை.
ஓர் உறவு இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஒருமித்த கருத்தோடு தீர்மானிக்கிற உரிமை ஆண் – பெண் இருவருக்குமே உண்டு. அதே நேரத்தில், தனக்குத் தேவையான காதல் என்கிற அற்புதமான ஓர் உணர்வை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, வெளியில் `இதெல்லாம் வேண்டாம்’ என்று நடித்துக் கொண்டு வாழும்போது, கிடைக்காத அந்தக் காதல் சில நேரங்களில் வலியையும் ஏமாற்றத்தையும் தரலாமென்று அஜய் அந்த தருணத்தில் அழுத்தமாய் உணர்ந்திருந்தான்.
உறவுகளைத் தக்க வைப்பது அல்லது கையாள்வது குறித்த தன் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்தபடியே அஜய் உறங்கிப் போயிருந்தான்.
அவன் அரை தூக்கத்தில் கண் விழித்தபோது யாரோ அவன் கைகளை இறுக்கமாகப் பற்றிகொண்டிருந்தை உணர்ந்தான். லேசாகக் கண் திறந்தான். மங்கலான பார்வையில் தன்னைப் பற்றியிருந்த கரங்களை உற்று நோக்கினான். அந்தக் கரங்களின் கதகதப்பு அவனுக்குப் புதிதாக இருந்தது. உதறிவிட வேண்டும்போல் தோன்றாமல் மெதுவாக கண்கள் உயர்த்திப் பார்க்கிறான். அவன் முன்னே இருந்த பெண்ணின் கண்களின் ஒளி அவனுக்குள் என்னவோ செய்தது. அவள் மெதுவாக அவனை நிமிர்த்தி உட்காரச் செய்தாள். முன் எப்போதோ பார்த்த முகம்.
“என் பேரு தீபிகா. அப்பா பேரு சிவா. என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?’’
அஜய்க்கு வரன் பார்த்திருந்த பெண். அவனுக்கு எல்லாமே நினைவுக்கு வந்தது.
அந்தக் கரங்களிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.
“ம்’’ என்ற சொல்லை மட்டும் உதிர்ந்துவிட்டு அமைதியாக தலைகுனிந்திருந்தான்.
அதன்பின், தினம் தினம் மருத்துவமனைக்கு வந்து அஜய்யை கவனித்துக் கொண்டாள் தீபிகா. 15-ம் நாள் முடிவில் மருத்துவர் அவனை பரிசோதிக்க வந்திருந்தார்.
“ஹாய் அஜய்… நீங்க இப்ப கம்ப்ளீட்லி ஆல்ரைட். உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்’’
ஒரு சிறிய புன்னகையுடன் வெளியே சென்றார் மருத்துவர்.
அதே மகிழ்வோடு அஜய்யுடன் கட்டிலில் அமர்ந்தபடி அவன் கரங்களை இறுகப் பற்றினாள் தீபிகா.
அவள் கரங்களில் இருந்து மெதுவாக தன் கரங்களை விடுவித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் அஜய்.
முதுவாக அருகில் சென்று அவள் முன் நெற்றியில் படர்ந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“இந்த லைஃப் முழுக்க, நீ உன்னை என்கிட்ட இருந்து டிஸ்சார்ஜ் ஆகாம பாத்துக்கணும்னு நினைக்கிறேன் தீபு. நீயும் பார்த்துப்பியா?’’ என்று நிறுத்தினான்.
அஜய்யின் அன்பான இந்த வாக்கியம் தீபிகாவின் கண்களின் மேலும் ஒளியைக் கூட்டியது.
எதைப் பற்றியும் யோசிக்காமல் அவனைக் கட்டியணைத்தாள். அஜய்யின் உடல், மன வலிகளுக்கு அப்போது புது நிவாரணம் கிடைத்தது. இருவரின் இதயத்துடிப்பும் சீரான அளவில் வேகமாய் துடித்துக் கொண்டிருந்தன.
– ரகசியங்கள் தொடரும்…
– அர்ச்சனா