ஐபிஎல் 2024ல் இறுதிப் போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை தீர்மானிக்கும் குவாலிஃபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சம பலம் பொருந்திய இரு அணிகளும் மோதிய போட்டி என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பக்கம் தான் நேற்று வெற்றி காற்று வீசியது. அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மே 26 ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்துக்கு சன்ரைசர்ஸ் அணி மோத இருக்கிறது.
இப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் மூன்றாவது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும். சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால் 2வது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும். இதனால் சுவாரஸ்யமான ஐபிஎல் இறுதிப் போட்டி காத்திருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் ஐபிஎல் 2024 பயணம் குறித்து அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஓபனாக பேசியுள்ளார். “ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே சன்ரைசர்ஸ் அணியின் இலக்கு, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது தான். ஒரு அணியாக நாங்கள் இதனை சாதித்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில், பேட்டிங் தான் பலம். அதனால், அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.
எங்களது அணியின் பந்துவீச்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் என அனுபவ வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இதனால் என்னுடைய வேலை மிகவும் எளிதாக இருந்தது. ஷபாஸ் அகமது, அபிஷேக் சர்மா ஆகியோரை பந்துவீச வைத்தது எனக்கே ஆச்சரியமாக தான் இருந்தது. இந்த முடிவை எங்களது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தான் எடுத்தார். இந்த முடிவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான இப்போட்டியில் கை கொடுத்தது. இதே உத்வேகத்துடன் இறுதிப் போட்டியில் நிச்சயம் விளையாடுவோம். அந்த ஒரு போட்டி வெற்றி பெற்றால் மட்டுமே எங்களுடைய பணி முழுமையடைந்ததாக இருக்கும்” என தெரிவித்தார் கம்மின்ஸ்.
இப்போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி சன்ரைசர்ஸ் அணிக்கு பேட்டிங்கில் 18 ரன்களும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்திய ஷபாஸ் அகமது பேசும்போது, “ஆட்டநாயகன் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சூழலுக்கு ஏற்றவாறு என்னை களமிறக்குவதாக பயிற்சியாளர் கூறினார். அதனால் நான் தயாராகவே இருந்தேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் பெற்ற வெற்றியை நாங்கள் கொண்டாட மாட்டோம். இன்னும் இறுதிப் போட்டி எஞ்சியிருக்கிறது. அதில் வெற்றி பெற்ற பிறகே நாங்கள் கொண்டாடுவோம்” என்றும் தெரிவித்தார்.