ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக (ஆர்சிபி) விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆர்சிபி ரசிகர்கள் குறித்தும் விராட் கோலி குறித்தும் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது. பெங்களூரு அணியின் முக்கிய வீரரான தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்தவுடனேயே இரு அணி வீரர்களுமே தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தினேஷ் கார்த்திக்கும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார். தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து விராட் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் உருக்கமாகப் பேசியிருந்தனர். ரசிகர்களும் உருக்கமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்கள் குறித்தும் விராட் கோலி குறித்தும் பேசிய தினேஷ் கார்த்திக், “ஆர்சிபி என்றாலே அதன் ரசிகர்கள்தான். அவர்களைத் தாண்டி என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு முக்கிய பங்கு என்றாலும், அதன் ரசிகர்கள் அதைவிட முக்கிய பங்காக இருக்கிறார்கள். இவர்களால்தான் 2022 உலக கோப்பை அணியில் நான் இடம்பெற்றேன். அதை ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து விராட் கோலி குறித்துப் பேசிய அவர், “நான் எப்போதும் விராட் கோலியின் அபிமானி. நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகன். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.