எலிமினேட்டரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்றதால், இந்தப் போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், குவாலிஃபயரில் கொல்கத்தா அணியிடம் தோற்றாலும், இப்போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், பக்கத்து வீட்டு சண்டையை பகுமானமாக ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சென்னை, மும்பை அணி ரசிகர்களுக்கும் சென்னையில் நடந்த இந்த குவாலிபையர் போட்டி முக்கியமானதாக இருந்தது.
டாஸ் வென்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு ‘விரட்டி விரட்டி அடிக்கும்’ ஹெட்டும், ‘அடித்து அடித்து விரட்டும்’ அபிஷேக்கும் தொடக்கம் கொடுக்க, முதல் ஓவரை போல்ட் வீசினார். ஃபோர், சிக்ஸ் என அதிரடியாகத் தொடங்கிய அபிஷேக்கை வெளியேற்றினார் போல்ட். ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் போல்ட் எடுக்கும் 29வது விக்கெட் இது.
திரிபாதி களமிறங்க, அஷ்வின் சுழல் இரண்டாம் ஓவரிலேயே வந்தது. அந்த ஓவரில் 9 ரன்கள். போல்ட் வீசிய 3வது ஓவரில் 7 ரன்கள். அஷ்வின் வீசிய 4வது ஓவரில் குட் லென்த்தில் அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்பில் போடப்பட்ட பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிகளாக மாற்றியும், ஃபுல் டாஸாகப் போடப்பட்ட பந்தை ஃபைன் லெக்கில் சிக்ஸிற்கு விரட்டியும், அந்த ஓவரில் 16 ரன்கள் குவித்தார் திரிபாதி. போல்ட் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தை ஃபைன் லெக்கில் சிக்ஸ், ஆஃப் சைட்டில் ஒரு பவுண்டரி என சுற்றிச் சுற்றி அடித்துக்கொண்டிருந்த திரிபாதி, பவுன்ஸான ஸ்லோவர் பந்தை அப்பர் கட்டாக அடிக்க முயன்று, சஹாலிடம் கேட்ச் ஆனார். 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்திருந்தார். அடுத்து வந்த மார்க்ரமும் ‘வரட்டா மாமே டுர்ர்ர்ர்’ என வெளியேறினார்.
சந்தீப் வீசிய 6வது ஓவரில் ஹெட்டின் கை ஓங்க, 11 ரன்கள் கிடைத்தன. 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் குவித்திருந்தது ஹைதராபாத். ஆவேஷ் கான் வீசிய 7வது ஓவரில் பேக்வார்ட் ஸ்கொயரில் அலேக்காக ஒரு சிக்ஸ், டீப் பேக்வார்ட் பாயிண்டில் ஒரு பவுண்டரி என அதிரடி ஆறுச்சாமி ஹெட் தன் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். சஹால் வீசிய 8வது ஓவரில் 11 ரன்கள், அஷ்வின் வீசிய 9வது ஓவரில் 4 ரன்கள், சந்தீப் சர்மா வீசிய 10வது ஓவரில் 3 ரன்கள் கிடைத்தன. பவுண்டரிகள் இல்லாமல் காண்டாகிக்கொண்டிருந்த ஹெட், சந்தீப்பின் ஸ்லோவர் பாலை அடிக்க முயன்று கேட்ச் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு, 99 ரன்கள் சேர்த்திருந்தது ஹைதராபாத்.
சஹால் வீசிய 11வது ஓவரில் 3 ரன்கள், சந்தீப் வீசிய 12வது ஓவரில் 6 ரன்கள். 5 ஓவர்கள் பவுண்டரிகள் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தது க்ளாசன் – நிதிஷ் கூட்டணி. டாட் பால்களுக்கு மரம் நடுவோம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்ததால், பசுமை பிரியர்களாக மாறிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் டாட் பால்களை அள்ளி வீசினர். சேப்பாக்கம் அமேசான் காடாக மாறிவிடுமோ என சென்னை ரசிகர்களும் கொஞ்சம் ‘கெதக்’ ஆனார்கள். டேய்… பரமா அடிடா! சஹால் வீசிய 13வது ஓவரில் க்ளாசனின் ஓவர் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸருடன் 8 ரன்கள் கிடைத்தன. ஆவேஷ் கானின் 14வது ஓவரில் ஒயிட் யாக்கரை பின்பக்கம் அடிக்க முயன்று, சஹலிடம் கேட்ச் ஆனார் நிதிஷ். 142kmph இல் அடுத்த பாலே சமத்தை போல்ட் ஆக்கினார் ஆவேஷ்.
14 ஓவர்களுக்கு 120 – 6 என திணறிக்கொண்டிருந்தது ஹைதராபாத். சஹால் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் இம்பேக்ட் ப்ளேயரான ஷாபாஸ் அகமது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ளாசன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஆனால், அடுத்த பாலே சந்தீப்பின் யாக்கரில் போல்டு ஆனார். சிறிது சிறிதாக ரன்களைச் சேர்த்தாலும், மறுபக்கம் விக்கெட்கள் வீழ்ந்துக்கொண்டிருந்தன. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத். அதிரடியாகத் தொடங்கினாலும், மிடில் ஆர்டர் அந்த ரன் ரேட்டைப் பிடித்து செல்லப் போராடியது ஹைதராபாத். க்ளாஸன் மட்டும் ஓரளவிற்கு வலுசேர்க்க, ஒரு நம்பிக்கையான இலக்கை ஹைதராபாத்தால் வைக்க முடிந்தது.
ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வாலும் கோலர்-கேட்மோரும் தொடக்கம் கொடுக்க, முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் ஓவரில் 8 ரன்கள், கேப்டன் கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரில் 5 ரன்கள், புவனேஷ்வரின் 3வது ஓவரில் 6 ரன்கள் என சுமாரான தொடக்கத்தையே தந்தது ராஜஸ்தான். கம்மின்ஸின் ஓவரில் கோலர் கேட்ச் ஆகினார். புவனேஷ்வரின் 6வது ஓவரில் 6, 4, 4, 4 என தேங்கி நின்ற ஸ்கோரை உயர்த்தினார் ஜெய்ஸ்வால். அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தன. பவர் ப்ளே முடிவில் 51 ரன்கள் சேர்த்திருந்தது ராஜஸ்தான்.
உனத்கட் ஓவரில் 5 ரன்கள், ஷாபாஸ் அகமதின் சுழலில் ஜெய்ஸ்வால் விக்கெட், அபிஷேக் சுழலில் கேப்டன் சாம்சன் விக்கெட், மீண்டும் ஷாபாஸ் சுழலில் பராக், அஷ்வின் விக்கெட் என அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். 79-5 என சரிந்தது பேட்டிங் ஆர்டர். அணியை தூக்கி நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் ஹெட்மயரும், அபிஷேக்கின் சுழலில் 6வது விக்கெட்டாக வெளியேறினார்.
6 ஓவர்களுக்கு 83 ரன்கள் தேவை என்ற நிலையில் பவலும், ஜுரேலும் களத்தில் இருந்தனர். ஷாபாஸ், அபிஷேக் ஓவர்களில் சில பவுண்டரிகளையும் சிங்கிள்களையும் மட்டும் தேற்றிக்கொண்டு, விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டிருந்தது ஜுரேல் – பவல் கூட்டணி. 4 ஓவருக்கு 63 ரன்கள் என்ற சமகால ஐபிஎல்லில் எட்டக்கூடிய இலக்கை துரத்தியது ராஜஸ்தான். கம்மின்ஸின் 17வது ஓவரில் 10 ரன்கள். நடராஜன் வீசிய அட்டகாசமான 18வது ஓவரில் ஸ்லோவர் பந்துக்கு பவல் பலியாக, அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே கிடைத்தது.
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஜுரேல், 26 பந்துகளில் அரை சதம் கடந்தார். கம்மின்ஸ் வீசிய 19வது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன. நடராஜன் வீசிய கடைசி ஓவருக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணி 5 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியதோடு, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவற விட்டிருக்கிறது ராஜஸ்தான்.
அட்டகாசமான பௌலிங் ரொட்டேஷனால் ராஜஸ்தானைச் சுருட்டி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹைதராபாத். தொடர்ந்து மூன்று சீசன்களாக லீக் சுற்றோடு நடையைக் கட்டிக்கொண்டிருந்த ஹைதராபாத், இம்முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. மே 26-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.