மறைந்த நடிகை ஶ்ரீதேவி – போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான வலம் வருகிறார்.
2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்துகொள்ளவதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசுபொருளாகியது.
இதையடுத்து ஶ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு தான் நிறைய மாறியிருப்பதாக உருக்கமாகப் பேசியிருக்கும் ஜான்வி கபூர், “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அம்மாவுக்கு சமய நம்பிக்கைகள் நிறைய இருக்கிறது.
வெள்ளிக் கிழமைகளில் கருப்பு ஆடை அணியக்கூடாது, முடி வெட்டக் கூடாது என சிறு சிறு நம்பிக்கைகள் வைத்திருப்பார்கள். அம்மா இருக்கும்போது அதன்மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்ததேயில்லை.
அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரது நினைவாக அவர் சொன்னதையெல்லாம் பின்பற்றித் தொடங்கிவிட்டேன். அவரிடமிருந்த ஆன்மீக நம்பிக்கைகள் இப்போது என்னிடமும் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.