உதகை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் நாளை தொடங்கி 2 நாட்களுக்குஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், அரசு மற்றும்தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைக்கிறார்.
ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆர்.என்.ரவிமாநாட்டின் தொடக்க மற்றும்நிறைவு விழாவில், குடியரசுத் தலைவர் உரையை ஆற்றுவார். தொடக்க அமர்வின்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டின் முதல் நாளில்,சாஸ்த்ரா பல்கலை. துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்திய சுப்ரமணியம் எழுதிய ’நிறுவன மேம்பாட்டுத் திட்டம் – பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலம்’ குறித்து ஐஐடி-காரக்பூர் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் பார்த்தா சக்ரபர்தி விளக்குகிறார்.
சிஸ்கோ இன்ஜினியரிங் தலைவர் ஸ்ருதி கண்ணன்‘புதுமை மற்றும் தொழில்முனைவு’ என்ற தலைப்பிலும், அவிநாசிலிங்கம் உயர்கல்வி நிறுவன துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர் ‘தேசியகடன் கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
துணைவேந்தர்கள் உரை: மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டின்போது ‘பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளனர்.
நெட் அல்லது யுஜிசி-சிஐஎஸ்ஆர் தேர்வுகளில் தகுதிபெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச்பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோர் அனுபவங்களைப் பகிர்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து நேற்று உதகைவந்தார். வரும் 29-ம் தேதி ஆளுநர் ரவி, கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சிமுனைகளை கண்டு ரசிக்கிறார். பின்னர், வரும் 30-ம் தேதி உதகையிலிருந்து சென்னை புறப்படுகிறார்.