மும்பை: மகாராஷ்டிராவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரில் மாவட்ட நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி செய்த சைபர் கிரிமினல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில்மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்துடன் ஒரு தகவல் வந்துள்ளது. உடனே ரூ.50,000 அனுப்பும்படியும் மாலைக்குள் திருப்பித் தந்துவிடுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நீதிபதி அந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ரூ.50,000 அனுப்பியுள்ளார்.
பிறகு மாவட்ட நீதிபதிக்கு மீண்டும் பணம் அனுப்புமாறு கோரிக்கை வந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த நீதிபதி, மும்பைஉயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். இதில் வாட்ஸ்-அப் புகைப்படத்தில் காணப்படும் நீதிபதி அவ்வாறு யாரிடமும் பணம் கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மும்பை உயர் நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி தனது வாட்ஸ்-அப்பில் டிஸ்பிளே படமாக (டிபி) வைத்துள்ள புகைப்படத்தை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.