தென்காசி/திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை நீடித்தது.
இன்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு அணைப் பகுதியில் 6 மி.மீ., கொடுமுடியாறு அணை, நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 3 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 2.40 மி.மீ., மாஞ்சோலை, ஊத்து பகுதியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1052 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 66.20 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3.75 அடி உயர்ந்து 34.75 அடியாக இருந்தது. மற்ற அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் 2.80 மி.மீ., தென்காசியில் 1.80 மி.மீ., குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 57 அடியாக இருந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.