முதுமலை: கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை கிராமத்தில் வீட்டில் பதுங்கி இருந்து, பிடிப்பட்ட சிறுத்தை முதுமலை வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் இடும்பன் என்பவரது வீட்டில் நேற்று சிறுத்தை ஒன்று பதுங்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) மேற்பார்வையில் வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகம், வனக் கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் குமார், வீட்டின் கூரை மீது ஏறி வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தைக்கு மயக்க மருந்து துப்பாக்கி மூலம் செலுத்தினார். மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் வலை போட்டு பிடித்து கூண்டில் அடித்தனர்.
பின்னர் சிறுத்தையை சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காங்கிரஸ் மட்டம் பகுதியில் மருத்துவ குழுவினர் முன்னிலையில் இன்று அதிகாலை விடுவித்தனர். மயக்கம் தெளிந்து சிறுத்தை நல்ல நிலையில் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியே சென்ற சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வனத்துறையினர் போராடி சிறுத்தையை பிடித்த பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.