சென்னை: எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகள் சரோஜ் கோயங்காவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகளும், எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சரோஜ் கோயங்கா (94) சென்னை ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த அவர், நேற்று முன்தினம் (மே 24) காலமானார்.
கல்வி, வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய மறைந்த சரோஜ் கோயங்காவுக்கு ஆர்த்தி அகர்வால், ரித்து கோயங்கா, கவிதா சிங்கானியா என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சரோஜ் கோயங்காவின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: இதழியல் துறையில் பெரும் சாதனை படைத்த எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகளான சரோஜ் கோயங்கா மறைந்ததை அறிந்து வேதனையடைந்தேன்.
சரோஜ் கோயங்கா எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன இயக்குநராக சிறப்பாக பணியாற்றி, ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவையும் உருவாக்கினார். இதழியல், தொழில்துறையில் சாதனை படைத்தது மட்டுமின்றி, சிறந்த மனிதநேயராக கொடைத்தன்மை மிக்கவராகவும் விளங்கிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இந்தியபத்திரிகை உலகில் அளப்பரிய பங்காற்றிய ராம்நாத் கோயங்காவின் பாரம்பரியத்தில் வந்த சரோஜ் கோயங்காவின் மறைவு பேரிழப்பாகும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட அவர், மாற்றுத் திறனாளிகளுக்காக 10 ஏக்கர் நிலத்தை 1998-ம் ஆண்டில் இலவசமாக வழங்கியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.