திருப்பூர்: சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து உடுமலை அருகே கேரளா செல்லும் சாலையை மறித்து தமிழக விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீராதாரத்தை பாதிக்கும் வகையில் கேரள அரசு சிலந்தி ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேரளா செல்லும் ஒன்பதாறு சோதனை சாவடி அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார்.
அமராவதி நகர் செல்லும் சாலையில் கோரிக்கையை விளக்கி நிர்வாகிகள் பேசினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று கேரளா செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஈசன் முருகசாமி பேசியதாவது: “தமிழக விவசாயிகளின் நீர் ஆதாரத்தை குறிவைத்து கேரள அரசு நடத்தி வரும் அத்துமீறலை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும். அமராவதி அணையின் நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே கடந்த ஆறு மாதங்களாக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
அணைக்கான கட்டுமான பொருட்கள் தமிழகத்தில் இருந்து தினமும் 50 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வெட்கக்கேடானது. இந்தநிலையில் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையை தமிழக அரசு எவ்வாறு பாதுகாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காவிரி நடுவர் மன்ற உத்தரவுகளை மதிக்காமல் கேரள அரசு செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து வழிகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போராட்டத்தை முன்னிட்டு உடுமலை டிஎஸ்பி ஜே சுகுமாரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் உடுமலையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் பரபரப்பு நிலவியது.
கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனங்கள் அமராவதி நகர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.