சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையில், அதிமுக-வினர் ஏற்பாடு செய்திருந்த தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பழனிசாமி, அங்கு கரியராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 70-வது பிறந்தநாள் கடந்த 12-ம் தேதி அதிமுக-வினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,-க்கள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதிமுக-வினர் முன்னிலையில் 70 கிலோ கேக்-ஐ வெட்டி, தனது பிறந்தநாளை பொதுச்செயலாளர் பழனிசாமி கொண்டாடி, மகிழ்ந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை மலை கிராமத்துக்கு இன்று வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமையில் அதிமுக-வினர் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள கரியகோவில் மலை கிராமத்துக்குச் சென்ற பொதுச்செயலாளர் பழனிசாமி, அங்குள்ள பழமையான கரியராமர் கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார்.
பின்னர், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரம்மாண்டமான பிறந்தநாள் கேக்கை வெட்டி, மலைவாழ் மக்களுக்கும், அதிமுக-வினருக்கும் வழங்கினார். மேலும், அவரது பிறந்தநாள் விழா ஏற்பாடாக, மலைவாழ் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, சிலருக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி அன்னதானம் வழங்கினார்.
இந்நிழ்ச்சியில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்எல்ஏ.,-க்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா உள்பட அதிமுக-வினர் திரளாக கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமத்தில், அதிமுக-வினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மலைவாழ் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமத்தில், அதிமுக-வினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரம்மாண்டமான கேக்கை வெட்டி, மலைவாழ் மக்களுக்கும் அதிமுக-வினருக்கும் வழங்கினார்.