ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்தியாவோடு ஒரு நெருக்கமான நில தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஓர் அற்புதமான கொள்கையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத் திருக்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரோடு இணைந்து பயணிப்பதன் ஊடாக தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் கடந்த 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த பொழுது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால் அன்று தவறவிட்டுவிடப்பட்டுவிட்து
ஏனென்றால் தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005 இருந்தது. அன்று அந்த வாய்ப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாப் போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்களை துயரங்களை இடம்பெருவுகளை எமது மக்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம்.
இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்த பொழுது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்த பொழுது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வந்திருக்கவில்லை ஆனால் ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார்.
நான் அவருக்கு சொல்வதுண்டு நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபரில் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று.
உங்களுக்கு தெரியும் இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுக்கின்ற பொழுது தென் இலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடி இருந்தது. அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவி இருக்கும். அதேநேரத்தில் எடுத்ததுக்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை.
ஆனால் கடந்த இரண்டு வருடதுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயல்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றர்.அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன்.
இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடைய செயல்பாட்டை பாராட்டி இருக்கின்றார்கள்.
அந்த வகையில் எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன்.
மேலும் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக என்னுடைய கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கின்றேன்.
அரசில் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லி வந்த இலங்கை இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது சிறந்த ஒரு ஆரம்பமாக இருக்க முடியும் என்று. ஆனால் துரதிஸ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இதேநேரம் நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ் மருத்துவபீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள் ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன.
அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு நான் கொண்டு வந்திருக்கின்றேன். நான் மாத்திரம் இல்லை சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதனடிப்பயில் அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு தருவார் என்று நம்புகின்றேன்.
அதோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நில தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன் வைத்திருக்கின்றார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாக நாம் விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும்.
இதேநேரம் தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றி போட்டது என்று சொல்வதுண்டு. ஆனால் என்ன பொறுத்த வகையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிச்சயம் பெற்று தருவேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .