புதுடெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது: “இரவு 11.30 மணியளவில் எங்களுக்கு விவேக் விஹார் பகுதியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்றபோது அருகிலிருந்த கட்டிடத்துக்கும் தீ பரவி இருந்தது. ஆனால், அதில் இருந்தோர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தீயணைப்புத் துறை தலைவர் அடுல் கார்க், “தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் விபத்தில் வெடித்துச் சிதறி தீயை மேலும் தூண்டியது” என்றார்,
டெல்லி காவல் ஆணையர் ஷாதரா கூறுகையில், “மருத்துவமனையின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க்ப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்த சோகம் விலகுவதற்குள் டெல்லியில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.