ராமேசுவரம்: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்தும், தூத்துக்குடி, கன்னியாகுமாரி தென்பகுதி துறைமுகங்களுக்கும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் ரயில், சாலை பாலங்கள் வழியாக வங்கக் கடலில் பயணித்து வருகின்றன.
இந்த கப்பல்கள் பாம்பன் பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல்களின் உள்ள வானிலையை ஆராய்ந்த பின்னரே ரயில்வே தூக்குப் பாலத்தை கடக்க அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே செங்குத்து தூக்குப் பாலத்தை நிறுவுவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இதற்காக பாலத்தின் நடுவே இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூண்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் எதிரே அமைக்கப்படுகிறது.
இதனால் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்வதற்கு தடை விதிப்பதாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.