பெங்களூரு: “பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரிய எங்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இன்று தெரிவித்தார். மஜதவின் ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்கு பாலியல் துன்புறத்தல் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி மாநில அரசிடமிருந்து மே 21-ம் தேதி தான் கோரிக்கை வந்தது என்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதை கேலி செய்த பரமேஸ்வரா, பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா மே 1-ம் தேதி அனுப்பிய கடிதம் என்னவானது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா அமைச்சர் கூறுகையில், “எனக்கு தெரிந்தவரை எங்களுக்கு அவர்களிடம் (மத்திய அரசு) எந்தத் தகவலோ, கடிதமோ வரவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இன்னும் ஓரிரு நாட்களில் அவை (தூதரக பாஸ்போர்ட்) ரத்து செய்யப்பட்டுவிடும் என்று வெளியுறுவுத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை நான் பார்த்தேன். ஆனால் அதுகுறித்த எந்தவிதமான எழுத்துபூர்வமான தகவலும் எங்களுக்கு வரவில்லை.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி முதல்வர் சித்தராமையா மே 1-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதன் பிறகு பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மாநில அரசால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
முதல்வரின் முதல் கடிதத்துக்கான பதில் என்ன, அந்தக் கடிதம் எங்கே போனது? ஒரு மாநில முதல்வர் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதும் கடிதத்துக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சரோ பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மாநில அரசிடமிருந்து மே 21-ம் தேதிதான் கடிதம் வந்தது என்று கூறுகிறார்.
அப்படியெனில் அந்த முதல் கடிதம் எங்கே போனது என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்? அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள், நல்லது, அவர்கள் எடுக்கட்டும். ஆனால் நாங்கள் இப்போது தான் கடிதம் எழுதினோம் முன்பே எழுதவில்லை என கூறுகிறார்கள். அது சரியில்லை” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் மீதான பாலியல் குற்றச்சாட்டினை கருத்தில் கொண்டு கர்நாடகா அரசு கோரியபடி அவரது தூதரக பாஸ்போர்ட்டினை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை பிரஜ்வலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
முதல்வர் கடிதம்: முன்னதாக, ஹாசன் தொகுதி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய தேவையான மற்றும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் படி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு மே 22-ம் தேதி இரண்டாவது முறையாக கடிதம் எழுதி இருந்தார்.
பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் பேரனும் ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்கள் கடந்த 26ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
தூதரக பாஸ்போர்ட்: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பிரஜ்வல் ரேவண்ணா, தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் நேரடியாக வழங்கும் இந்த பாஸ்போர்ட் பொதுவாக தூதரக முக்கிய அதிகாரிகள், வெளிநாட்டில் அரசுப் பணி மேற்கொள்வோர், வெளியுறவு துறையின் இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சில நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்ல முடியும். அங்கு 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.