சென்னை: புனித ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் 326 பேருடன் சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது.
சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்கு ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு 5,746 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லவுள்ளனர். முதல் விமானம் 326 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 8.30 மணிக்கு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது.
வரும் ஜூன் 9-ம் தேதி வரை 17 விமானங்களில் 5,746 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். பயணத்தை முடித்து கொண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை 17 சிறப்பு தனி விமானங்களில் ஜெட்டாவில் இருந்து சென்னை திரும்புகின்றனர். முன்னதாக, முதல் விமானத்தில் பயணம் செய்ய வந்த 326 பேரை, தமிழக அரசு சார்பில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குடும்பத்தினர், நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர்.
அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், “தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டுதோறும் 5,746 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுடன் துணை வழிகாட்டிகளாக 100 பேருக்கு ஒருவர் வீதம் விமானங்களில் செல்கின்றனர். கடந்த ஆண்டு சுமார் 4,000 பேர் சென்றனர்.
இந்த ஆண்டு இதுவரையில் 5,746 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு அரசு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” என்று செஞ்சு மஸ்தான் தெரிவித்தார்.