மும்பை சயானில் இருக்கும் லோக்மான்ய திலக் மருத்துவமனை மிகவும் பிரபலமாகும். இம்மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் தாரே. இவர் அம்மருத்துவமனையில் தடயவியல் பிரிவின் தலைவராக இருக்கிறார். சயான் மருத்துவமனைக்கு மும்பை அருகில் உள்ள மும்ப்ரா என்ற இடத்தைச் சேர்ந்த ருபைதா ஷேக் (60) என்ற பெண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு இதே மருத்துவமனையில் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. மறு சிகிச்சைக்காக ருபைதா மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மருத்துவமனையின் 7-வது கேட்டில் மயக்கமான நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் விரைந்து சென்றபோது அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவரால் பேச முடியவில்லை. ஆனால் அவரது தலை மற்றும் கையில் ஏற்பட்ட காயத்தால் அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி இறந்து போனார்.
எப்படி ருபைதாவிற்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். மருத்துவமனை நிர்வாகம் சரியாக போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் மருத்துவமனை கேட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது நோயாளி ருபைதா மீது மருத்துவமனை வளாகத்தில் கார் ஒன்று மோதியது பதிவாகி இருந்தது. அக்கார் டாக்டர் ராஜேஷுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
கார் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது ருபைதா கார் முன்பு மயங்கி விழுந்துவிட்டதாக டாக்டர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது டாக்டரின் கார் நோயாளி மீது மோதி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் டாக்டர் ராஜேஷை கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராஜேஷ் கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஜம்போ மருத்துவமனைக்கு டீனாக செயல்பட்டவர் ஆவார்.