கான் (Cannes) திரைப்பட விழாவில் முதன்முறையாக இந்திய நடிகை ஒருவர் விருது வென்றிருக்கிறார்.
77-வது கான் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. பல்வேறு இந்தியத் திரைப்படங்கள் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. இதில் ‘சன்பிளவர்ஸ்’ என்ற இந்திய குறும்படம் முதல் இடத்தைப் பிடித்து விருது பெற்றிருக்கிறது. சித்தானந்த் எஸ் நாயக் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து முதல் முறையாக இந்திய நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்று சாதனைப் படைத்திருக்கிறார்.

அதாவது ‘தி ஷேம்லஸ்’ படத்தில் நடித்ததற்காக இந்திய நடிகை அனசுயா செங்குப்தாவுக்கு சிறந்த நடிகைக்கான கான் விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.
‘தி ஷேம்லஸ்’ படத்தை கான்ஸ்டான்டின் போஜோனோவ் இயக்கி இருந்தார். 77 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கான் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய நடிகை இவர்தான்.

மும்பையில் புரொடக்ஷன் டிசைனராகத்தான் வேலை பார்த்து வருகிறார் அனசுயா செங்குப்தா. ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்துள்ள அனசுயா செங்குப்தா ‘தி ஷேம்லஸ்’ படத்தில் நடித்த நிலையில், சிறந்த நடிகைக்கான கான் திரைப்பட விருதை வென்றிருக்கிறார். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதே கான் திரைப்பட விழாவில் இரண்டாவது பெரிய விருதான Grand pix விருதை பாயல் கப்பாடியா இயக்கிய இந்தியப் படமான All We Imagine as Light திரைப்படம் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.